தர்மபுரி, ஜூலை 30: தர்மபுரி புறநகர் பகுதியான சோகத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஏ.ரெட்டிஅள்ளியில், 10 ஏக்கர் தனியார் நிலத்தில், தர்மபுரி நகராட்சி நிர்வாகம் சார்பில், புதிய பஸ் நிலையம் ரூ.39.14 கோடியில் கட்டப்பட்டது. இந்த பஸ் நிலையம், கடந்த பிப்ரவரி 5ம் தேதி பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது. இதையடுத்து அனைத்து புறநகர் பஸ்களும், புதிய பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டது. புதிய பஸ் நிலையத்திற்கு சேலம், பெங்களூரு, பழைய பஸ் நிலையம் ஆகிய பகுதியில் இருந்து பஸ்கள், ஷேர் ஆட்டோக்கள், மினி பஸ்கள் உள்ளிட்ட பல்வேறு வகை வாகன போக்குவரத்து அதிகரித்தது.
இதையடுத்து மாவட்ட காவல் துறை சார்பில் சேலம்-கிருஷ்ணகிரி பைபாஸ் சாலை சந்திப்பில் சிக்னல் அமைக்கப்பட்டது. இந்த சிக்னல் அருகே, ஜீப்ரா கோடுகள் இதுநாள் வரை வரையவில்லை. இதனால் சிக்னலில் இருந்து புறப்படும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, வாகனங்கள் நிறுத்தம் செய்யும் கோடுகள், ஜீப்ரா கோடுகள், பாதாசாரிகள் சாலையை கடக்க கோடுகள் ஆகியவற்றை உடனடியாக வரைய வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.



