தர்மபுரி, ஜூன் 30: தர்மபுரி மாவட்டத்தில் பார்ம்ரோஸ் விளைச்சல் அதிகரித்துள்ளது. தர்மபுரி மாவட்டம் அன்னசாகரம், வெங்கட்டம்பட்டி, வத்தல்மலை அடிவாரம், குள்ளனூர், தூதரையான் கொட்டாய் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் பார்ம்ரோஸ் செடிகள் பயிரிடப்பட்டு வருகிறது. பார்ம் ரோஸ் செடிகளில் இருந்து ஆயில் எடுக்கப்படுகிறது. இந்த ஆயில் சோப்பு உள்ளிட்ட வாசனை பொருட்கள் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளாக கடும் வறட்சி ஏற்பட்டதால், பார்ம்சோஸ் சாகுபடி வரலாறு காணாத வீழ்ச்சி அடைந்தது. இந்நிலையில், பார்ம் ரோஸ் ஆயில் விலை சரிவு காரணமாகவும் சாகுபடி பரப்பு பாதியாக குறைந்தது. நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை ஓரளவிற்கு பரவலாக பெய்து வருவதால் தர்மபுரி, நல்லம்பள்ளி பகுதிகளில் பார்ம்ரோஸ் விதைக்கப்பட்டுள்ளது. இதனால் நடப்பாண்டில் பார்ம்ரோஸ் விளைச்சல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
