குற்ற செயல்களை தடுக்க தர்மபுரி ரயில் நிலையத்தில் 42 இடங்களில் சிசிடிவி கேமராதயார் நிலையில் கட்டுப்பாட்டு அறை
தர்மபுரி, ஜூன் 30: தர்மபுரி ரயில் நிலையத்தில் குற்ற செயல்களை தடுக்க 42 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது. தர்மபுரி நகர் அருகே ரயில்நிலையம் உள்ளது. தர்மபுரி ரயில் நிலையம் வழியாக தினசரி 25க்கும் மேற்பட்ட பயணிகள் ரயில்கள், எக்ஸ்பிரஸ் ரயில்கள், சரக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக பகல் நேரத்தை விட இரவு நேரங்களில் அதிக ரயில்கள் தர்மபுரி வழியாக இயக்கப்படுகின்றன. இந்த ரயில் நிலையத்திற்கு தினசரி 1,500 முதல் 2 ஆயிரம் பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் தர்மபுரி ரயில் நிலையத்திற்கு வந்து செல்லும் பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்தவும், திருட்டு, வழிப்பறி போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை கண்காணிக்கவும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என்று பயணிகள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தர்மபுரி ரயில்நிலையத்தில் ரூ.22 கோடிக்கு வளர்ச்சி திட்டப்பணிகள் தற்போது நடந்து வருகிறது. ரயில்நிலையம் நுழைவுவாயில் மேம்படுத்தும் பணி, எஸ்கலேட்டர் அமைக்கும்பணி, சரக்குகள் ஏற்றி இறக்கி கையாளும் இடங்களில் பணிகள் நடந்து வருகிறது. இப்பணிகள் மேலும் விரைவுபடுத்த வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்நிலையில் தர்மபுரி ரயில் நிலையத்தில் 42 இடங்களில் விரைவில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது.
இதற்கான கட்டுப்பாட்டு அறை தயார் நிலையில் உள்ளது. இதுகுறித்து ரயில் பயணிகள் கூறுகையில், `தர்மபுரி ரயில்நிலையத்தில் ஆண்டுக்கணக்கில் வளர்ச்சி திட்டப்பணிகள் நடக்கிறது. இந்த பணிகள் ஆமை வேகத்தில் நடக்கிறது. இந்த பணிகளை விரைவுபடுத்த வேண்டும். ரயில் நிலையத்தில் முக்கிய இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும்,’ என்றனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: தர்மபுரி ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு தேவையான பல்வேறு மேம்பாட்டு பணிகள் ரூ.22 கோடியில் நடந்து வருகிறது. ரயில் நிலையத்தில் கண்காணிப்பு பணியை மேற்கொள்வதற்கு வசதியாக, ரயில் நிலைய நுழைவுவாயில், டிக்கெட் வழங்கும் இடம், அனைத்து நடைமேடை பகுதிகள், பயணிகள் காத்திருக்கும் அறைகள், வாகன நிறுத்துமிடம் உள்பட அனைத்து பகுதிகளிலும் 42 சிசிடிவி கேமராக்கள் விரைவில் பொருத்தப்பட உள்ளன.
இந்த கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை, 24 மணி நேரமும் பார்வையிடுவதற்கு வசதியாக கண்காணிப்பு அறை ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் செயல்பாடு விரைவில் தொடங்கும். இதன் மூலம், ரயில் நிலையத்தில் குற்ற செயல்கள் நடக்கிறதா? என்பதை தொடர்ந்து கண்காணித்து தடுக்க முடியும். மேலும், தர்மபுரி வழியாக செல்லும் ரயில்களில் திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் தர்மபுரி ரயில் நிலையத்தில் இறங்கி தப்பி செல்லும் சம்பவங்கள் அவ்வப்போது நடக்கிறது. சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கும் போது, இத்தகைய குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை விரைவாக அடையாளம் கண்டுபிடிக்க முடியும். இவ்வாறு அதிகாரிகள்
தெரிவித்தனர்.


