ஒழுக்கம், பண்பாடு, தன்னம்பிக்கையை வளர்க்க பள்ளி மாணவர்களுக்கு வாழ்வியல் திறன் கல்வி வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
தர்மபுரி, ஜூன் 29:தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஒழுக்கம், பண்பாடு, தன்னம்பிக்கையை வளர்க்க, வாழ்வியல் திறன் கல்வி வழங்குவதற்கான, வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் மேம்பாட்டிற்காக பல்வேறு கல்விசாரா இணை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, பள்ளி மாணவர்களிடம் ஒழுக்கம், பண்பாடு, ஒட்டுமொத்த ஆளுமை வளர்ச்சி, தன்னம்பிக்கை மற்றும் அறம் சார்ந்த வாழ்வியல் சிந்தனைகளை வளர்தெடுக்கும் நோக்கில், வாழ்வியல் திறன்கள் மற்றும் விழுமியக் கல்விக்கான பாடநூல்களை வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, 1 முதல் 12ம் வகுப்பிற்கான \\”வாழ்வியல் திறன்கள் மற்றும் விழுமியங்கள்\\” புத்தகங்கள் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மூலம் உருவாக்கப்பட்டு, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத்தால் புத்தகம் அச்சிடப்பட்டு, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இதனை மாணவர்களிடம் திறம்பட கொண்டு செல்வதற்கென வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:வாழ்வியல் திறன் கல்விக்கான பாடவேளை மற்றும் பொறுப்பு ஆசிரியரை பொறுத்தவரை, கல்வியாண்டு நாட்காட்டியில் குறிப்பிட்டுள்ள நன்னெறிக் கல்வி பாடவேளையினை முழுமையாக பயன்படுத்தி \\”வாழ்வியல் திறன்கள் மற்றும் விழுமியங்கள்\\” புத்தகத்தில் உள்ள பாடங்களின் கருத்துக்களை நடப்பு நிகழ்வுகளுடன் சேர்த்து மாணவர்களுக்கு கற்பித்திட வேண்டும். குறிப்பாக, 10 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நன்னெறிக் கல்வி பாடவேளைகளில் பிற பாடங்கள் நடத்துதல் கூடாது. நன்னெறிக் கல்வி பாடத்தினை \\”வாழ்வியல் திறன்கள் மற்றும் விழுமியங்கள்\\” புத்தகத்தினை பயன்படுத்தி விருப்பமுள்ள ஆசிரியர்கள் அனைவரும் மாணவர்களுக்கு கற்பித்திட தலைமையாசிரியர் அறிவுறுத்திட வேண்டும்.
இலக்கிய மன்றம், வினாடி வினா போன்ற பள்ளி அளவிலான மன்றப் போட்டிகளில் வாழ்வியல் திறன்கள் மற்றும் விழுமியங்கள் புத்தகத்தினை பயன்படுத்தி கவிதை, கட்டுரை பேச்சுப் போட்டி போன்ற செயல்பாடுகள் மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் இதன் அடிப்படையில் போதை எதிர்ப்பு மன்றம், சாலை பாதுகாப்பு மன்றம், இணையப் பாதுகாப்பு நிகழ்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும். வாழ்வியல் திறன்கள் மற்றும் விழுமியங்கள் வழியாக மாணவர்கள் மனநல மேம்பாட்டினை ஏற்படுத்த வேண்டும். மாணவர்களுக்கு ஏற்படும் உளவியல் சார்ந்த பிரச்சனைகளை நீக்கி அவர்களை வாழ்வில் மேன்மை அடையச் செய்வது ஒவ்வொரு ஆசிரியரின் முதன்மையான பணியாகும். குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு இது மிகவும் பயனுள்ளதாகும்.
வாழ்வியல் திறன்கள் மற்றும் விழுமியங்க் கல்வி வாயிலாக இதனை வழங்க வேண்டும். மனநல மேம்பாட்டிற்கான பாடத்தலைப்புகளாக மனவெழுச்சிகளைக் கையாளுதல், மனத்தடை உடை! வெற்றியை அடை, நல்லொழுக்க சிந்தனைகளை வளர்க்க நல்வழி நட, காலம் தவறாமை, தெளிவான சிந்தனை வித்திடும் சாதனை போன்ற தலைப்புகளை கையாளலாம். இந்த தலைப்புகள் அல்லாமல் பள்ளியின் கல்விசார் மற்றும் கல்வி சார செயல்பாடுகளில் வாழ்வியல் திறன்கள் மற்றும் விழுமியங்கள் புத்தகத்தினை பயன்படுத்தி பிற தலைப்புகளில் உள்ள நன்னெறி சார்ந்த கருத்துக்களை மாணவர்களுக்கு கற்பித்திட வேண்டும். அதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இதனை திறம்பட செயல்படுத்திட மாவட்ட அளவில் திட்டத்தினை வகுத்து அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், தாளாளர்கள் மற்றும் முதல்வர்களுக்கு உரிய சுற்றறிக்கையினை அனுப்பிட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
