Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

மாவட்டத்தில் 984 மையங்களில் 1.08 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து: டிஆர்ஓ துவக்கி வைத்தார்

தர்மபுரி, ஜூன் 29: தர்மபுரி மாவட்டத்தில், நேற்று 984 இடங்களில் தேசிய போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்கள் நடந்தது. போலியோவை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு, ஆண்டு தோறும் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, நடப்பாண்டிலும் நேற்று தர்மபுரி மாவட்டம் முழுவதும், போலியோ சொட்டு மருந்து முகாம்கள் 984 இடங்களில் நடந்தது. இம்முகாம்களில், ஒரு லட்சத்து 8,343 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 964 முகாம்கள் கிராமப்புறத்திலும், 20 முகாம்கள் நகராட்சி பகுதிகளிலும் மொத்தம் 984 முகாம்கள் அமைக்கப்பட்டு இருந்தது. சந்தைப்பேட்டை நகர்ப்புற அரசு மருத்துவமனையில், நேற்று காலை போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது. முகாமை மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா துவக்கி வைத்தார். தர்மபுரி எம்எல்ஏ சௌமியா அன்புமணி முன்னிலை வகித்து குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

இப்பணிக்காக பொது சுகாதாரத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், பள்ளி கல்வித்துறை ஊரக வளர்ச்சி துறை உள்ளாட்சித் துறை வருவாய்த்துறை, ரோட்டரி சங்கம், மகளிர் சுய உதவிக் குழுக்கள், தன்னார்வலர்கள் என சுமார் 3000 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். அதிகளவு மக்கள் கூடும் இடங்களான பஸ் மற்றும் ரயில் நிலையங்கள், சந்தைகள், வழிபாட்டுத்தலங்கள் மற்றும் சுங்கச்சாவடி ஆகிய இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன. மேலும் சமுதாயத்தில், பின்தங்கியுள்ள மக்களான நாடோடிகள், நரிக்குறவர்கள், கட்டுமானத் தொழிலாளர்களின் குழந்தைகள் மற்றும் போக்குவரத்து வசதி இல்லாத மலை கிராமங்களில் உள்ள குழந்தைகள் பயன்பெறும் வகையில், 18 நடமாடும் மருத்துவக் குழுக்களும் அமைக்கப்பட்டு அங்குள்ள குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

போலியோ சொட்டு மருந்து முகாம்களுக்காக, சுகாதாரத்துறை மற்றும் பிற துறைகளைச் சேர்ந்த 58 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன. தர்மபுரி நகராட்சி நகர்புற மருத்துவமனையில் நடந்த முகாமில், நகராட்சி சேர்மன் லட்சுமி, நகராட்சி கமிஷனர் வசந்தி, மாவட்ட சுகாதார மருத்துவ அலுவலர் ராஜேந்திரன், டாக்டர்கள் தேவி, தமிழ்செல்வி, முன்னாள் எம்எல்ஏ வெங்கடேஸ்வரன் நகர சுகாதார அலுவலர் ராஜரத்தினம் மற்றும் கிருஷ்ணாபாரமெடிக்கல் கிருஷ்ணமூர்த்தி, செவிலிய மாணவிகள், நகராட்சி பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இது குறித்து டாக்டர்கள் கூறுகையில், `மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள், குறிப்பாக தாய்மார்கள் பிறந்த குழந்தை முதல் 5 வயதிற்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் ஏற்கனவே, போலியோ சொட்டு மருந்து கொடுத்திருந்தாலும், மீண்டும் சிறப்பு முகாம்களில் அளிக்கப்படும் போலியோ சொட்டுமருந்து வழங்கலாம். நாட்டில் போலியோ இல்லாத சமுதயாத்தை உருவாக்க அனைவரும் ஒத்துழைப்பு தரவேண்டும்,’ என்றனர்.

காரிமங்கலம்: காரிமங்கலம் அரசு சமுதாய உடல் நல மையத்தில், போலியோ சொட்டு மருந்து வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்எல்ஏ தலைமை வகித்து, போலியோ சொட்டு மருந்து வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலர் அனுராதா மற்றும் காவேரி, செந்தில்குமார், டாக்டர் சந்திரமோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.