தர்மபுரி, மே 28: தர்மபுரி டவுன் பழைய தர்மபுரியை சேர்ந்த முருகன் மகள் பிரபாவதி (26). கெலமங்கலத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 16ம் தேதி, வேலைக்கு சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இதுபற்றி பெற்றோர் தர்மபுரி டவுன் போலீசில் புகார் அளித்தனர். தொப்பூர் போலனஅள்ளியை சேர்ந்த செந்தில்குமார் மகள் அபிநயா (21). பெற்றோரை இழந்த இவர், அதே பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி, தர்மபுரி அரசு கல்லூரியில் பிஏ 3ம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் கல்லூரிக்கு சென்றவர் மாலை வீடு திரும்பவில்லை. இதுபற்றி தொப்பூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தர்மபுரி பாகலஅள்ளியை சேர்ந்த மாரியப்பன் மகள் ரம்யா (21). தர்மபுரி அரசு கல்லூரியில் பி.காம் படித்து வருகிறார். வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர் வீடு திரும்பவில்லை. இதுபற்றிய புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர். தர்மபுரி மாவட்டம், கருக்கம்பட்டியை சேர்ந்தவர் சத்யராஜ் (30). ஈரோடு மாவட்டத்தில் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு ஹேமலதா என்ற மனைவி, மொழியாழினி என்ற மகள் உள்ளனர். கடந்த 21ம் தேதி, சத்யராஜ் வேலைக்கு சென்ற நிலையில், 22ம் தேதி மாலை மனைவிக்கு போன் செய்துள்ளார். ஆனால், அவர் எடுக்கவில்லை. சந்தேகம் அடைந்த அவர் தர்மபுரிக்கு வந்து பார்த்த போது, மனைவி, மகள் மாயமானது தெரியவந்தது.
இதுபற்றி கோபிநாதம்பட்டி போலீசில் புகார் செய்தார். பாப்பாரப்பட்டி அருகே பிக்கம்பட்டியை சேர்ந்த முருகன் மகள் அம்சவேணி (19). இவர் பாப்பாரப்பட்டி மேல்நிலைப்பள்ளியில் மாரத்தான் பயிற்சி எடுத்து வந்துள்ளார். கடந்த 21ம் தேதி காலை 6 மணிக்கு, வீட்டை விட்டு சென்ற அம்சவேணி, பின்னர் வீடு திரும்பவில்லை. இதுபற்றிய புகாரின் பேரில் பாப்பாரப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அதே போல், காரிமங்கலம் அடுத்த கீழ்கொள்ளுப்பட்டியை சேர்ந்த ரவி மகள் பூர்ணிமா (18), தனியார் கல்லூரியில் படித்து வரும் இவரை, நேற்று முன்தினம் அதிகாலை முதல் காணவில்லை. இதுபற்றிய புகாரின் பேரில், காரிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
