காரிமங்கலம், மே 28: காரிமங்கலம் அருகே, கெரகோட அள்ளி பிரிவு சாலை, மின்விளக்கு எரியாமல் இருளில் மூழ்கியதால், பொதுமக்கள் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினர். தர்மபுரி -கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில், கெரகோட அள்ளி பிரிவு சாலையில் இருந்து பிரிந்து மாநில நெடுஞ்சாலை சாலை காரிமங்கலம் நகருக்குள் செல்கிறது. இந்த சாலையில், நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகிறது. தேசிய நெடுஞ்சாலையில், முக்கியமான சாலையாக உள்ள நிலையில், சர்வீஸ் சாலை மற்றும் பிரிவு சாலை ஆகியவை கிருஷ்ணகிரி, தொப்பூர் இடையிலான தனியார் டோல்கேட் நிறுவனம் மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது.
நாட்டிலேயே அதிக அளவில் டோல்கேட் கட்டண வசூலிக்கும் சாலையை முறையாக பராமரிக்காததுடன், இணைப்பு மற்றும் பிரிவு சாலைகளில் அதிக அளவிலான வெளிச்சம் உள்ள மின் விளக்குகள் பொருத்தப்பட வில்லை. இந்த பிரிவு சாலையில் ஏற்கனவே, போதிய மின்வெளிச்சம் இல்லாத நிலையில், விபத்துகள் அதிக அளவில் ஏற்பட்டு வந்தது. சில மாதங்களாக பிரிவு சாலையில் உள்ள விளக்குகள் அனைத்தும் எரியாமல் இருளில் மூழ்கியுள்ளது. இதனால் தேசிய நெடுஞ்சாலை வழியாக பிரிவு சாலையை கடக்கும் வாகனங்கள் ஓட்டிகள், பொதுமக்கள் விபத்தில் சிக்கி வருகின்றனர்.
தற்போது, இப்பகுதியில் சாலை விரிவாக்க பணி நடந்து வரும் நிலையில், சாலையின் இருபுறமும் சர்வீஸ் சாலை அமைப்பதற்காக பெரிய அளவிலான பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளது. இதனால் மேலும் இப்பகுதிகள் மின் வெளிச்சம் இல்லாததால் விபத்து ஏற்பட்டு பொதுமக்கள் பாதிப்படைந்து வருவது தொடர்ந்து வருகிறது. இது குறித்து தனியார் டோல்கேட் நிறுவனத்திடம் புகார் தெரிவித்தும், அலட்சியமாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய கவனம் செலுத்தி, பிரிவு சாலையில் பழுதான மின்விளக்குகளை சீரமைத்து, அதிக வெளிச்சம் உடைய மின்விளக்குகளை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
