தர்மபுரி, மே 28: தர்மபுரி சிப்காட்டில் ரூ.66.76 கோடியில் சாலை மற்றும் அடிப்படை வசதி பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்பணிகள் வரும் ஜூன் மாதத்தில் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் இருந்து கடந்த 1965 அக்டோபர் மாதம் 2ம் தேதி தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் உள்ளிட்ட பகுதிகளை பிரித்து, தனியாக தர்மபுரி மாவட்டம் உருவாக்கப்பட்டது. தர்மபுரி மாவட்டத்தில் இருந்த ஓசூர், கர்நாடகா எல்லையில் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்ததால், ஓசூரில் ஏராளமான தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. இதனால், தர்மபுரி மாவட்டம் மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களுக்கும், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைத்து வந்தது.
இதனால், அதிவேக தொழில் வளர்ச்சி அடைந்த பகுதியாக ஓசூர் திகழ்ந்து வந்தது. இந்நிலையில் ஓசூர், தேன்கனிக்கோட்டை, தளி, உரிகம் உட்பட மாவட்ட எல்லையில், சுமார் 80 கி.மீ தூரத்திற்கு மேல் உள்ளவர்கள், தங்களது அடிப்படை கோரிக்கைகளுக்காக, தர்மபுரி கலெக்டர் உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்கு வந்து செல்ல சிரமம் அடைந்து வந்தனர். இப்பகுதி பொதுமக்களின் நலன் கருதி, கடந்த 2004ம் ஆண்டு, பிப்ரவரி 9ம் தேதி, தர்மபுரி மாவட்டத்தில் இருந்து கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை, பர்கூர், ஓசூர் உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கி கிருஷ்ணகிரி மாவட்டம் உருவாக்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம் தனியாக பிரிக்கப்பட்ட பின், ஓசூரில் சிப்காட்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும், போச்சம்பள்ளி, பர்கூர் என சிப்காட் எண்ணிக்கை விரிவடைந்து, தற்போது ஊத்தங்கரை சிப்காட் வரை நீண்டுள்ளது.
ஆனால், கடந்த 1965ல் சேலத்தில் இருந்து தனி மாவட்டமாக உதயமான தர்மபுரி மாவட்டத்தில் சிப்காட் அமைக்கப்படவில்லை. கடந்த 2016ம் ஆண்டு, சிப்காட் அமைப்பதற்காக தர்மபுரி அடுத்த அதியமான்கோட்டை, தடங்கம், பாலஜங்கமனஹள்ளி, அதகபாடி ஆகிய பஞ்சாயத்துகளில், அரசு புறம்போக்கு மற்றும் விவசாய நிலம் என 1,733 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது.நிலம் கையகப்படுத்தப்படும் பணி முடிந்ததை அடுத்து, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் சேலம்-தர்மபுரி நான்கு வழிச்சாலையில், முதல் கட்டமாக ரூ.17 கோடியில் 1.3 கி.மீ. தூரத்துக்கு சாலை அமைக்கப்பட்டது. இதை தொடர்ந்து கடந்த ஏப்ரல் 18ம் தேதி, சிப்காட் முதல் தொகுதி ரூ.66.76 கோடி மதிப்பில் சாலைகள், கால்வாய், மழைநீர் கால்வாய், நடைபாதை உள்ளிட்டவை அமைக்கும் பணி தொடங்கியது.
இப்பணிகள் வரும் 2026 ஜூன் 17ல் முடிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. திட்டமிட்ட காலத்திற்குள் சிப்காட் பேஸ் 1ல் பணிகளை முடிக்க மாவட்ட நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது. சிப்காட்டில் தொழில் நிறுவனங்களுக்கு 200 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் பல நிறுவனங்கள் தொழில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தர்மபுரி மாவட்டத்தில் சிப்காட் என்ற மாவட்ட மக்களின் கனவு விரைவில் நிறைவேறும் என்பதுடன், இம்மாவட்ட மக்கள் வெளிமாவட்டங்கள், மாநிலங்களுக்கு வேலை தேடி செல்வது குறையும் என்பதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதே போல், சிப்காட்டில் பிற பணிகளையும் விரைந்து முடித்து, இங்கு தொழில் நிறுவனங்களை கொண்டு வர வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
