Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

மழைநீர் வரத்து கால்வாயில் மருந்து பாட்டில்கள் வீச்சு

நல்லம்பள்ளி, ஜூலை 27:நல்லம்பள்ளி ஒன்றியத்தில், மழைநீர் வரத்து கால்வாயில் மருந்து பாட்டிகளை மூட்டையாக கொண்டு வந்து கொட்டிச்சென்ற மர்ம நபர்கள் குறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம், பாகல்அள்ளி ஊராட்சி தண்டுகாரம்பட்டி கிராமத்தில், சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு அருகாமையில் தண்டுகாரம்பட்டி ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரிக்கு 4 ரோடு பகுதியில் இருந்து மழைக்காலங்களில் தண்ணீர் வரும் கால்வாய் அமைந்துள்ளது. இந்த கால்வாய் வழியாக மழைநீர் தண்டுகாரம்பட்டி ஏரிக்கு வருகிறது. கடந்த சில மாதங்களாக இந்த மழைநீர் வரத்து கால்வாயில், இரவு நேரத்தில் மர்ம நபர்கள் வாகனங்களில் கொண்டு வந்து ஆங்கில, சித்த மருத்துவ மருந்து பாட்டில்களை மூட்டை, மூட்டையாக வீசிச்செல்கின்றனர்.

இந்த பகுதியில் குடியிருப்புகள் மிகவும் குறைவாக இருப்பதால், ஆட்கள் நடமாட்டம் இல்லாத நேரங்களில், சமூக விரோதிகள் மருத்துவமனை கழிவுகள், காலாவதியான மருந்துகள் ஆகியவற்றை வாகனத்தில் எடுத்து வந்து கால்வாயில் கொட்டிச் செல்கின்றனர். மருத்துவ கழிவுகளை விவசாய நிலங்களில் ஆடு, மாடுகளை மேய்க்க வரும் குழந்தைகள் எடுத்து, ஆபத்தை அறியாமல் விளையாடி வருகின்றார். கனமழை பொழியும் பொழுது, மழைநீர் கால்வாயில் கட்டப்பட்டுள்ள மருத்துவ கழிவுகள் ஏரிக்கு அடித்துச் செல்லப்படுகிறது. இதனால் நீர் நிலைகளில் மருத்துவ கழிவுகள் கலந்து பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அபாயம் ஏற்படுகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன், சித்த மருத்துவமத்தில் கார்டியோரியம் பிளஸ் என்ற மருந்து பாட்டில்களை மூட்டையில் கொண்டுவந்து கொட்டிச்சென்றுள்ளனர். இந்த மருந்தை மருத்துவர் அனுமதியுடன் உட்கொள்ளும்போது ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, ரத்த நாளங்களில் ஒருமைப்பாட்டை பாதுகாத்து இதய ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் தண்மை கொண்டது ஆகும்.

ஆனால் இந்த மருந்து பாட்டில்கள் மருத்துவருக்கு இலவசமாக சிகிச்சைக்கு வழங்கப்பட்டுள்ளது. காலாவதியாகாத இந்த மருந்து பாட்டில்களை எதற்காக ஏரி கால்வாயில் கொட்டிச்சென்றனர் என தெரியவில்லை. இந்த மருந்து பாட்டில்களை குழந்தைகள் எடுத்து குடித்தால், உயிருக்கு ஆபத்தை தரக்கூடும். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் ஆபத்து உள்ளது. எனவே, அசம்பாவிதம் ஏற்படும் முன்பாக, கலெக்டர் சுகாதாரத்துறை அதிகாரிகள் மூலம் மருந்து பாட்டில்களை பறிமுதல் செய்து, விசாரணை நடத்தி, மருந்து பாட்டில்களை கொட்டி செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.