Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

தர்மபுரி நகருக்கு வெளியே புதிய ரிங் ரோடு திட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு

தர்மபுரி, ஜூலை 27:தர்மபுரி - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை, தர்மபுரி - ஓசூர் விரைவு தேசிய நெடுஞ்சாலை என 2 தேசிய நெடுஞ்சாலைகள் செல்வதால், தர்மபுரி நகரத்திற்கு வெளியே புதிய ரிங் ரோடு அமைக்கும் திட்டம், தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தர்மபுரி நகரில் சமீபகாலமாக போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. குறிப்பாக, தர்மபுரி நான்கு ரோடு, கிருஷ்ணகிரி ரோடு, திருப்பத்தூர் ரோடு, நேதாஜி பை-பாஸ் சாலை, பென்னாகரம் சாலையில் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. கனரக வாகனங்கள் வந்தால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை தவிர்க்க, தர்மபுரிக்கு வெளியே வெளிவட்ட சாலை (ரிங்ரோடு) அமைக்க வேண்டும். அல்லது பழைய தர்மபுரி முதல் நல்லம்பள்ளி சேஷம்பட்டி வரை உயர்மட்ட மேம்பால சாலை அமைக்க வேண்டும். இதில் ஏதாவது ஒன்று அமைத்தால் தர்மபுரி நான்கு ரோடு, கணேசா தியேட்டர் சந்திப்பு, அரசு மருத்துவமனை சந்திப்பு சாலை, எஸ்வி ரோடுகளில் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்படாது.

தர்மபுரிக்கு வெளியே தர்மபுரி - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை, தர்மபுரி - ஓசூர் விரைவு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. தர்மபுரியில் முக்கிய சாலையில் மருத்துவமனை, கல்லூரி, பள்ளிகள், மாவட்ட கலெக்டர் அலுவலகம், மாவட்ட காவல்துறை அலுவலகம், தர்மபுரி மருத்துவ கல்லூரி மருத்துவமனை, தமிழ்நாடு மின்சார வாரியம், இரண்டு அரசு போக்குவரத்து கழக பணிமனை, தீயணைப்பு நிலையம் மற்றும் 30க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் வங்கிகள் உள்ளன. ஆட்டோமொபைல் வேலை தளம், ஓட்டல்கள் மற்றும் 9 பெட்ரோல் பங்க்குகள் மற்றும் சினிமா தியேட்டர், திருமண மண்டபம் என சாலையின் இருபுறங்களிலும் அமைந்துள்ளன. தர்மபுரி நகரத்தில் ஒரு லட்சம் மக்கள் வசிக்கின்றனர். தினசரி 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் தர்மபுரி நகருக்குள் வந்து செல்கின்றனர்.

தினசரி சுமார் 1.50 லட்சம் மக்கள் நகரத்தின் வழியாக செல்லும் சாலைகளை பயன்படுத்தி வருகின்றனர்.

இதனால், தர்மபுரி நகரில் போக்குவரத்து நெரிசல், ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. வளைவு நெளிவான சாலை, போக்குவரத்து விதிமீறல், விபத்தில் உயிரிழப்பு, வெளிமாவட்டத்தை சேர்ந்த வாகனங்களும் தர்மபுரியை கடந்து செல்ல வேண்டிய நிலை, வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, பார்க்கிங் இடம் இல்லாதது, வாகனங்களால் சாலை ஆக்கிரமிப்பு, போக்குவரத்து நெரிசலால் நேரம், பணம், பெட்ரோல் விரயம் ஏற்படுகிறது. எல்லா சாலைகளும், தர்மபுரி நகரத்தை தொட்டுச்செல்வது போன்றவற்றால், நெருக்கடி ஏற்பட்டு விபத்துக்கள், உயிரிழப்புகள், வாகன ஓட்டிகளுக்கு தேவையில்லாத சிரமங்கள் உள்ளிட்டவை ஏற்படுகின்றன. அடிக்கடி நடக்கும் சாலை விபத்துக்களை தவிர்க்க, தர்மபுரி நகருக்கு வெளியே வெளிவட்ட சாலை (ரிங் ரோடு) அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அடிக்கடி வலியுறுத்தி வருகின்றனர்.

நகரம் விரிவாக்கம் செய்ய உள்ள நிலையில், தர்மபுரி நகருக்கு வெளியே வெளிவட்ட சாலை கட்டாயம் தேவைப்படுகிறது. நல்லம்பள்ளி சேஷம்பட்டி நான்கு வழிச்சாலையில் பிரிந்து லளிகம், வெங்கட்டம்பட்டி, எட்டிமரத்துப்பட்டி, அன்னசாகரம், ராஜாபேட்டை, தூதுரையான் கொட்டாய் அருகே வழியாக குண்டல்பட்டி தனியார் பள்ளியின் அருகே இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் நான்கு வழிச்சாலையில் இணையுமாறு தர்மபுரி நகர வெளிவட்ட (ரிங் ரோடு) சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. வெளிவட்ட சாலையின் நீளம், சுமார் 24 கிலோ மீட்டர் தூரம். தர்மபுரியின் வெளிவட்ட சாலை அமைக்க அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்காக தனியாக அலுவலகம் அதியமான்கோட்டை ரயில்வே மேம்பாலம் அருகே, தேவரசம்பட்டியில் அமைக்கப்பட்டு உள்ளது.

இங்கு பணியாற்றும் அலுவலர்கள் ரிங் ரோடு (வெளிவட்ட சாலை) அமைக்க கள ஆய்வு மேற்கொண்டனர். அதன் பின்னர், சாலை அமைக்க திட்ட மதிப்பீடு தயாரித்து அரசுக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், இதுவரை எந்த அனுமதியும் வரவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘தர்மபுரியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவே, வெளிவட்ட சாலை அமைக்க திட்ட மிதிப்பீடு தயாரித்து, அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், தர்மபுரியை ஒட்டியுள்ள தர்மபுரி - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை, தர்மபுரி - ஓசூர் விரைவு தேசிய நெடுஞ்சாலை என 2 தேசிய நெடுஞ்சாலைகள் செல்வதால், ரிங் ரோடு திட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது,’ என்றனர்.