தர்மபுரி, ஜூன் 26: சேலத்தில் இருந்து பெங்களூரு நோக்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், ரூ.2.02 கோடியில் விரிவாக்கப்பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்தியாவின் மிக நீளமான காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை செல்லும் சாலையும், வட மாநிலங்களையும், தமிழகத்தையும் இணைக்கும் வகையிலான என்எச்-44, சேலம்-பெங்களூரு தேசியநெடுஞ்சாலை உள்ளது. தினசரி 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் இரவு பகலாக இந்த சாலையில் இயக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக தமிழகத்திலிருந்து பெங்களூரு வழியாக வடமாநிலங்களுக்கு ஏராளமான சரக்கு வாகனங்களும் இதில் சென்று வருகின்றன.
ஏற்கனவே 4 வழிச்சாலையாக உள்ள இந்த சாலை தற்போது மேலும் பக்கத்துக்கு 7 மீட்டர் என மொத்தம் 14 மீட்டர் அகலத்துக்கு விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இப்பகுதியில் சுமார் 800 மீட்டர் நீளத்துக்கு சாலை விரிவாக்கப் பணிகளை மேற்கொண்டுள்ளது. குறிப்பாக சிப்காட் வளாகத்துக்கு வந்து செல்லும் கனரக வாகனங்கள் மற்றும் ஓசூர், கிருஷ்ணகிரி, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்து செல்லும் கனரக வாகனங்கள் நின்று செல்லும் வகையிலும் திட்டமிட்டு விரிவாக்கம் செய்யப்படுகிறது. சாலைகள் விரிவாக்கம் செய்து அணுகு சாலைகள் அமைக்கும் பணிகள் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வருகின்றன.
