Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

மாவட்ட விளையாட்டு மைதானத்தில் 16 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தம்: வீரர்களின் வாகன திருட்டு தடுப்பு

தர்மபுரி, ஜூன் 26: தர்மபுரி நகரில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ஏஐ தொழில்நுட்ப கேமரா உள்ளிட்ட 16 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதனால், வீரர்கள், நடைபயிற்சியாளர்களின் வாகனங்கள் திருடு போவது தடுக்கப்பட்டுள்ளது. தர்மபுரி நகரின் மையப்பகுதியில் மாவட்ட விளையாட்டு மைதானம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கட்டுப்பாட்டில் அமைந்துள்ளது. இந்த விளையாட்டு மைதானம் கடந்த 43 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. சுமார் 6 ஏக்கரில் மைதானம் அமைந்துள்ளது. இந்த மைதானத்தில் 8 ஓடுதளம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் மாநில அளவிலான தடகள போட்டிகள் நடத்தப்படுகிறது.

பள்ளி, கல்லூரிகளுக்கு இடையே தடகள போட்டிகள் மாவட்ட, மாநில அளவில் அவ்வப்போது நடத்தப்படுகிறது. இந்த விளையாட்டு மைதானத்தில் தடகளம், வாலிபால், இறகுபந்து, கூடைப்பந்து, கபடி, கால்பந்து, குத்துச்சண்டை, டேக்வாண்டோ, வில்வித்தை, ஸ்கேட்டிங், ஜிம் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. மாவட்ட விளையாட்டு அலுவலராக நிரஞ்சனும், 6 பயிற்சியாளர்களும் உள்ளனர். இந்த விளையாட்டு மைதானத்தில் வீரர், வீராங்கனைகள் தினசரி பயிற்சி பெறுகின்றனர். இந்த மைதானத்தில் தினசரி அதிகாலை 5.30 மணி முதல் 8.30 மணி வரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் நடைபயிற்சி மேற்கொள்கின்றனர்.

இதே போல், மாலையிலும் ஏராளமானோர் நடைபயிற்சி மேற்கொள்கின்றனர். காலை, மாலை நேரங்களில் பயிற்சிக்கு வரும் வீரர்கள் மற்றும் பொதுமக்கள், தங்கள் டூவீலர்களை நுழைவாயிலின் முன்பு வரிசையாக நிறுத்தி விட்டு செல்வார்கள். இவ்வாறு நிறுத்தி செல்லும் டூவீலர்களை, மர்ம நபர்கள் திருடிச் செல்லும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வந்தது. மேலும், இரவு நேரங்களில் மது குடிக்க வரும் வாலிபர்களை காவலாளிகள் விரட்டுவது வாடிக்கையாக இருந்தது. இந்நிலையில், பொதுமக்களின் உதவியுடன் மாவட்ட விளையாட்டு மைதானத்தை சுற்றிலும் 16 இடங்களில் நவீன சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. ஏஐ தொழில் நுட்பத்திலும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த கேமராக்களை கண்காணித்து, விளையாட்டு வீரர்கள், நடைபயிற்சியாளர்களை தவிர வேற நபர்களை விளையாட்டு மைதானத்திற்குள் அனுமதிக்கப்படுவதில்லை. இதனால் தற்போது வாகனங்கள் திருட்டு போவதில்லை. குடிமகன்களும் உள்ளே வருவதில்லை என்று நடை பயிற்சியாளர்கள் தெரிவித்தனர். மைதானத்தை சுற்றிலும் மின்விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மைதானத்திற்கு வரும் நடை பயிற்சியாளர்கள் கூறுகையில், `தர்மபுரி மாவட்ட விளையாட்டு மைதானம் மற்றும் உள்விளையாட்டு அரங்கம், வீரர்களின் விளையாட்டு திறன்களை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

இளைஞர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களின் நலனுக்காக, அரசால் பல்வேறு கட்டமைப்பு வசதிகள் இங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளன. இம்மைதானம், படிப்படியாக நவீன வசதிகளுடன் கூடிய உள்கட்டமைப்புகளைப் பெற்றுள்ளது. நவீன வசதிகளுடன் ஸ்டார் இண்டோர் இறகு பந்து உள்விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது மாவட்ட விளையாட்டு மைதானத்தில் வீரர்கள், வீராங்கனைகள், நடைபயிற்சியாளர்கள் பாதுகாப்பாக பயிற்சி பெறுவதற்கு ஏதுவாக, மைதானத்தை சுற்றி ஏஐ தொழில்நுட்பத்தில் 16 இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது,’ என்றனர்.