பாப்பிரெட்டிப்பட்டி, மே 26: பாப்பிரெட்டிப்பட்டி அருகே ஏ.பள்ளிப்பட்டி அருகிலுள்ள சின்ன ஏரியில் இறந்த கோழிகளை வீசிச்சென்றது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே ஏ.பள்ளிப்பட்டியில் உள்ள சின்ன ஏரியில் இறந்துபோன கோழிகளை சட்டவிரோதமாக கொட்டி வருகின்றனர். இதனால், ஏரிநீர் கடுமையாக மாசுபட்டு துர்நாற்றம் வீசும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த ஏரியைச் சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயம் செய்து வரும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மிகுந்த பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். இவ்வழியாக மக்கள் செல்ல முடியாத சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.
மேலும், இந்த மாசுபட்ட நீர் நிலத்தடி நீர், விவசாய நிலங்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கும் பெரும் ஆபத்தாக மாறியுள்ளது. மேலும், இந்த சின்ன ஏரி அருகே பிரசித்தி பெற்ற வேடியப்பன் கோயில் அமைந்துள்ளது.விசேஷ நாட்களில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் இந்த கோயிலுக்கு வந்து வழிபட்டு செல்கின்றனர். ஏரியில் கொட்டப்படும் கோழி கழிவுகளால் கடுமையான துர்நாற்றம் மற்றும் அசுத்தமான சூழ்நிலையால் பக்தர்கள் கோயிலுக்கு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மாவட்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட அரசுத்துறை அதிகாரிகளை அனுப்பி நேரில் ஆய்வு மேற்கொள்ளவும், ஏரியில் கொட்டப்பட்டுள்ள இறந்த கோழிகள் மற்றும் கழிவுகளை அகற்றி ஏரியை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், `இந்த குற்றச்செயலில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து, சுற்றுச்சூழல் மற்றும் நீர்நிலைகளை மாசுபடுத்தியதற்காக கடுமையான சட்ட நடவடிக்கை எடுத்து, தமிழ்நாட்டில் இதுபோன்ற செயல்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம். இந்த ஏரிநீரை எவ்வாறு பாதுகாப்பாக வடித்து சுத்திகரிப்பது என்பது குறித்து அதிகாரிகள் உடனடியாக வழிகாட்ட வேண்டும். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அவசர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்,’
என்றனர்.
