தர்மபுரி, மே 26: தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், நேற்று வாராந்திர மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடந்தது. கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளித்த மாற்றுத்திறனாளி உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, தர்மபுரி கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் கிருஷ்ணாபுரம் இன்ஸ்பெக்டர் அம்பிகா தலைமையில் பெண் போலீசார் உட்பட 31 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மனு கொடுக்க வந்த மக்கள், அவர்கள் வந்த வாகனங்கள், குடிநீர் கேன் உள்ளிட்டவற்றை தீவிர சோதனையிட்ட பின்பே கலெக்டர் அலுவலகத்திற்குள் அனுமதித்தனர்.
அதே போல், கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் ஐடி கார்டு இல்லாமல் பணிக்கு வந்தவர்களையும் போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்ய முயன்றனர். அப்போது, அவர்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நீங்கள் முறைப்படி ஐடி கார்டு அணிந்து வந்தால் தான் பொதுமக்கள் யார், அரசு ஊழியர்கள் யார் என தெரியவரும் என ேபாலீசார் கூறினர். கலெக்டர் அலுவலகத்தில் அரசுத்துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள், இதுபோன்று பிரச்னை உள்ள காலங்களிலாவது, பணிக்கு வரும் போது ஐடி கார்டு அணிந்து வர கலெக்டர் உத்தரவிட வேண்டும். இதனால் போலீசாரின் நேரம் மட்டுமின்றி, அரசு ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடும் நிலை ஏற்படாது என சமூக ஆர்வலர்கள் வலியறுத்தி உள்ளனர்.


