Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

டன்னுக்கு ரூ.5 ஆயிரம் மட்டுமே கிடைக்கிறது: மாங்கூழ் உற்பத்தி நிறுவனத்தை அரசே துவங்க நடவடிக்கை

தர்மபுரி, மே 26: மாம்பழ சீசன் தொடங்கியுள்ள நிலையில், நடப்பாண்டு மாம்பழங்கள் கொள்முதல் விலை மிகவும் குறைந்து உள்ளது. டன்னுக்கு ரூ.5 ஆயிரம் மட்டுமே கிடைப்பதால் கவலையடைந்த விவசாயிகள், தமிழக அரசே மாங்கூழ் உற்பத்தி நிறுவனத்தை துவங்கி, மாம்பழங்களை கொள்முதல் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாட்டில் சுமார் 1 லட்சத்து 25 ஆயிரத்து 104 ஹெக்டேர் பரப்பளவில் மா சாகுபடி செய்யப்படுகிறது. இதில் தர்மபுரி மாவட்டத்தில் மட்டும் 18,388 ஹெக்டேரில் மா சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. மாம்பழ உற்பத்தியில் தர்மபுரி மாவட்டம் மாநிலத்தின் முதலிடத்தை பிடித்துள்ளது.

இங்கு ஆண்டுக்கு சுமார் 1,69,270 மெட்ரிக் டன் மாம்பழங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. அல்போன்சா, பங்கனப்பள்ளி, பெங்களூரா, நீலம் உள்ளிட்ட ரகங்கள் அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளன. கடந்தாண்டு மா சாகுபடி எதிர்பார்த்ததை விட அதிக அளவில் மகசூல் கிடைத்தது. இதனால் மாம்பழங்களுக்கு கொள்முதல் விலை மிக மிக குறைவாக இருந்தது. அவற்றை பயிரிடுவதற்கும், பராமரிப்பு செலவு மற்றும் அறுவடை கூலி, வண்டி வாடகை உள்ளிட்டவைகளை ஒப்பிடும் போது, ரூ.2க்கு ஒரு கிலோ என்ற அளவில் மாம்பழங்கள் கொள்முதல் செய்யப்பட்டன. விலை கட்டுப்படியாகாமல் விவசாயிகள், மாம்பழங்களை மீன்களுக்கு உணவாகும் வகையில் ஏரி, குளங்களில் கொட்டும் நிலை ஏற்பட்டது.

அதே நிலை, நடப்பாண்டும் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் விவசாயிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. நடப்பாண்டு மாம்பழ சீசன் தொடங்கியுள்ள நிலையில், மாம்பழங்களின் கொள்முதல் விலை கிலோவுக்கு ரூ.2 முதல் ரூ.5 வரை மட்டுமே உள்ளது. சீசன் தொடக்கத்திலேயே இதுபோல குறைவான விலை இருந்தால், சீசன் களை கட்டும் நிலையில், மேலும் விலை குறையும். எனவே, தமிழக அரசு தொடக்கத்திலேயே இதில் கவனம் செலுத்த வேண்டும். இத்தொழிலில் ஏற்பட்டு வரும் தொடர் இழப்பு காரணமாக, பல விவசாயிகள் மா விவசாயம் மற்றும் மாம்பழ உற்பத்தி தொழிலை விட்டு, வேறு தொழிலுக்கு செல்லும் நிலை ஏற்பட்டு வருகிறது.

மாம்பழத்துக்கு கொள்முதல் விலை டன்னுக்கு ரூ.4 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் மட்டுமே கிடைக்கிறது. ஒரு டன்னுக்கு ரூ.15,000 என்ற வகையில் விலை கிடைக்க வேண்டும். இவற்றுக்கு தீர்வுகாண, அரசே மாம்பழ விலைகளை நிர்ணயிக்க வேண்டும். மேலும், தர்மபுரியில் மாங்கூழ் தயாரிப்பு நிறுவனங்களையும் தொடங்க வேண்டும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து காரிமங்கலம் அருகே, எலுமிச்சனஅள்ளியை சேர்ந்த விவசாயி சாம்ராஜ் கூறுகையில், ‘மா விவசாயம் தொடர்ந்து கேள்விக்குறியாகி வருகிறது. கடந்த காலங்களில் ஏக்கருக்கு 10 முதல் 15 டன் வரை மாங்காய்கள் மகசூல் கிடைத்தது.

காய்களும் பெரிய அளவில் திரட்சியாக இருந்தது. தற்போது 9 டன்கள் கிடைப்பதே அரிதாக உள்ளது. மேலும், காய்களும் சிறியவைகளாக உள்ளன. பூச்சி தாக்குதல், கரும்புள்ளி நோய்கள், காய்கள் உதிர்தல் உள்ளிட்டவைகளால் விவசாயிகளுக்கு நஷ்டம் அதிகரிக்கிறது. தோட்டக்கலைத்துறையினர் இவற்றுக்கு தீர்வு காண பூச்சி மருந்துகள் அடிப்பது உள்ளிட்ட நடைமுறைகளை மேற்கொண்டாலும், மா விவசாயிகள் தொடர்ந்து பாதிப்புக்கு உள்ளாகி வருகிறோம். நடப்பாண்டும் மாம்பழங்களின் விலை மிகவும் குறைவாக உள்ளது. இதற்கு அரசு தீர்வு காண வேண்டும்,’ என்றார்.

தர்மபுரி மாவட்ட வேளாண் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘தர்மபுரி மாவட்டத்தில் அதிகளவில் பெங்களூரா ரக மா சாகுபடி நடக்கிறது. கடந்தாண்டு ஒரு கிலோ ரூ.3 என்ற அளவில் விலை கிடைத்தது. மாம்பழங்களுக்கான விலையை தனியார் மாங்கூழ் தயாரிக்கும் நிறுவனங்களே நிர்ணயம் செய்கின்றன. கடந்தாண்டே மாங்கூழ் வெளிநாடு ஏற்றுமதி குறைந்தது. நடப்பு ஆண்டு இன்னும் மா அறுவடை தர்மபுரியில் துவங்கவில்லை. இம்மாத இறுதியில் மா அறுவடை துவங்கும். நடப்பாண்டில் கொள்முதல் விலை அதிகரிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றனர்.