கடத்தூர், ஜன. 26: கடத்தூர் அருகே ரயில்வே சுரங்க பாதை பணிக்காக குழி தோண்டிய போது குழாய் உடைந்ததால், 20 கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டம், கடத்தூர் -அரூர் பிரதான சாலையில் புட்டிரெட்டிப்பட்டி ரயில்வே கேட் அமைந்துள்ளது. இதனை அடிக்கடி மூடபடுவதால் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. ரயில்வே மேம்பாலம் அமைக்கப்பட வேண்டும் பொதுமக்கள் நீண்ட நாள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் இதற்காக, ரயில் பாதைக்கு கீழ், சுரங்க பாதை அமைக்கும் பணியை ரயில்வே நிர்வாகம் செய்து வருகிறது. இதற்காக பொக்லைன் மூலம் குழி தோண்டும்போது தாளநத்தம், கேத்திரெட்டிப்பட்டி ஊராட்சி பகுதிகளுக்கு செல்லும், பிரதான ஒகேனக்கல் குடிநீர் குழாய் உடைந்தது. இதனால் 2 ஊராட்சிகளுக்கு குடிநீர் நிறுத்தப்பட்டது. இதனால் இந்த ஊராட்சிகளுக்குட்பட்ட 20 கிராம மக்கள் ஒகேனக்கல் குடிநீர் கிடைக்காமல், அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்ய குடிநீரை விலைக்கு வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
பலர் அருகாமையில் உள்ள ஊராட்சிகளுக்கு டூவீலரில் சென்று, குடிநீரை எடுத்து அடிப்படை தேவையை பூர்த்தி செய்து வருகின்றனர். இது குறித்து மக்கள் புகார் தெரிவித்தும், குடிநீர் வழங்க, ஊராட்சி நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும், எவ்வித நடவ டிக்கையும் எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தாளநத்தம், அய்யம்பட்டி, நொச்சிக்குட்டை, கோவில்வளம், காவேரிபுரம், வேப்பிலைபட்டி, கேத்திரெட்டிப்பட்டி, சவுளு கொட்டாய் உள்ளிட்ட 20 கிராமங்களில், குடிநீரின்றி மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே, குடிநீர் குழாய் உடைப்பை சீரமைத்த, விரைந்து கிராமங்களுக்கு குடிநீர் வழங்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


