Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

காவிரி ஆற்றில் நிறம் மாறி வரும் தண்ணீர் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் விநியோகம் பாதிப்பு: சிக்கனமாக பயன்படுத்த கலெக்டர் அறிவுரை

தர்மபுரி: ஒகேனக்கல் காவிரியில் நிறம் மாறி பச்சை நிறத்தில் தண்ணீர் வருவதால், ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டுமென கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.

தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் குடிநீர் தேவைகளை கருத்தில் கொண்டு, ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த இரு மாவட்ட மக்களின் தாகத்தை போக்க தினசரி 1400 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுத்து விநியோகம் செய்யப்படுகிறது. காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து சரிந்தாலும் தினசரி குடிநீர் எடுத்து சுத்திகரித்து விநியோகம் செய்யப்படுகிறது. சமீப காலமாக காவிரி ஆற்றில் பச்சை நிறத்தில் கலங்கியவாறு தண்ணீர் வருகிறது. இதை குடிநீருக்கு எடுத்து சுத்திகரித்து விநியோகம் செய்தாலும் வீடுகளில் கலங்கிய நிலையிலேயே தண்ணீர் வருகிறது. இந்த தண்ணீரை குடிக்கும் மக்கள் காய்ச்சல் உள்ளிட்ட உடல் உபாதைகளால் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில், தர்மபுரி மாவட்ட கலெக்டர் சரவணன் குடிநீரை காய்ச்சி பாதுகாப்பாகவும், சிக்கனமாகவும் பயன்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளார். ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இருந்து குடிநீருக்காக தினசரி 4 மின்மோட்டார் மூலம் 1400 லட்சம் லிட்டர் குடிநீர் எடுத்து பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. தற்போது, காவிரி ஆற்றில் தண்ணீர் நிறம் மாறி வருவதால் குடிநீர் எடுப்பது பாதியாக குறைந்துள்ளது. 2 மின் மோட்டார் மூலமே குடிநீர் உறிஞ்சு, சுத்திகரித்து வழங்கப்படுகிறது. இதனால், தினசரி குடிநீர் விநியோகம் இருக்காது என குடிநீர் வடிகால்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கர்நாடக அணைகளின் நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்ய தொடங்கியுள்ளது.

இதனால், அணையில் தேங்கிய நிறம் மாறிய தண்ணீரை முன்னதாக திறந்து விட்டுள்ளனர். ஆற்றில் ஆலை கழிவுநீர் கலந்து விடப்படுகிறது. இதேபோல், கடந்த 2024ம் ஆண்டு இதே மாதத்தில் கலங்கிய நீர் வந்துள்ளது. காவிரி ஆற்றில் பச்சை நிறத்தில் தண்ணீர் வரத்தால் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது எடுக்கும் தண்ணீர் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு சுழற்சி முறையில் வழங்க வேண்டியுள்ளதால், குடிநீர் விநியோகம் குறைந்துள்ளது.இதுகுறித்து மாவட்ட கலெக்டர் சரவணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் பாதுகாப்பான குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. அண்மைக்காலமாக காவிரி ஆற்றின் நீரில் ஏற்பட்டுள்ள நீர்தர மாற்றம் மற்றும் பச்சை நிறத்தோற்றம் காரணமாக, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்ட நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் கூடுதல் சுத்திகரிப்பு மற்றும் கிருமிநாசினி நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

பொதுமக்களுக்கு தரமான மற்றும் பாதுகாப்பான குடிநீரை வழங்கும் நோக்கில், நீர்தரக் கண்காணிப்பு தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு குடிநீர் சுத்திகரிப்பு செயல்முறைகளை முழுமையாக மேற்கொள்வதற்காக, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் வழக்கமாக வழங்கப்படும் குடிநீர் அளவில் தற்காலிகமாக சுமார் 50 சதவீதம் மட்டுமே விநியோகம் செய்ய இயலும். எனவே, பொதுமக்கள் குடிநீரை அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் பயன்படுத்தி, தேவையற்ற வீணாக்கத்தை தவிர்த்து சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், குடிநீர் விநியோகம் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் பென்னாகரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக தமிழ்நாடு மின்வாரியத்தால் அறிவிக்கப்பட்ட மின் நிறுத்தம் இன்று(24ம் தேதி) மேற்கொள்ளவிருப்பதால், குடிநீர் வழங்க இயலாது என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. எனவே, பொதுமக்கள் குடிநீரை நன்கு காய்ச்சி ஆறவைத்து குடிக்க வேண்டும். வீட்டு மேல்நிலை மற்றும் தரைமட்ட நீர்த் தொட்டிகளை சுத்தமாக பராமரிக்க வேண்டும். குடிநீர் சேமிப்பு பாத்திரங்களை மூடி வைத்து பயன்படுத்த வேண்டும். குடிநீரின் நிறம், மணம் அல்லது சுவையில் மாற்றம் தென்பட்டால் உடனடியாக உள்ளாட்சி அமைப்புகள் அல்லது தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். பொதுமக்களின் நலன் கருதி மாவட்ட நிர்வாகமும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியமும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.