தர்மபுரி, ஜூலை 23: தர்மபுரி தடங்கம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அருகே வசித்து வந்தவர் சரவணன், கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி அம்சா (35). இவர்களுக்கு ஜீவிதா (16), நவீனா (6), குமரன் (3) என மூன்று குழந்தைகள் இருந்தனர். ஜீவிதா தர்மபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். நவீனா தடங்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் முதலாம் வகுப்பிலும், குமரன் தாளப்பள்ளம் அங்கன்வாடி மையத்திலும் பயின்று வந்தனர். சரவணனுக்கு குடிப்பழக்கம் உள்ளது. மேலும், மனைவியின் நடத்தையில் சரவணன் சந்தேகமடைந்ததால், அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 19ம் தேதி மீண்டும் குடும்பத்தகராறு ஏற்பட்டதால், கோபித்துக் கொண்ட அம்சா தனது 3 குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார். கணவர் மற்றும் அம்சாவின் பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும், அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் பின்புறம் உள்ள விவசாய கிணற்றில் அம்சா உள்ளிட்ட 4 பேரின் சடலங்கள் மிதப்பதை அம்சாவின் பெற்றோர் கண்டனர். இதுகுறித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த அதியமான்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சஞ்சீவ்குமார் தலைமையிலான போலீசார் மற்றும் தர்மபுரி தீயணைப்பு வீரர்கள், 4 பேரின் சடலங்களையும் மீட்டனர். பின்னர், பிரேத பரிசோதனைக்காக, தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குடும்பத் தகராறில் மனமுடைந்த அம்சா, குழந்தைகளை கல்லை கட்டி கிணற்றில் தள்ளி விட்டு, பின்னர் தானும் குதித்து உயிரிழந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இருப்பினும், இச்சம்பவத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட நான்கு உடல் களிலும் கற்கள் கட்டப்பட்டிருந்தன. இது உண்மையில் தற்கொலையா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில், அதியமான்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக, அம்சாவின் கணவர் சரவணனை போலீசார் பிடித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்பத் தகராறு, சம்பவத் திற்கு முந்தைய நாட்களில் நடந்த நிகழ்வுகள், அம்சா வீட்டை விட்டு வெளியேறிய சூழல் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் குறித்து, அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பிரேத பரிசோதனை அறிக்கை, தடயவியல் ஆய்வு முடிவுகள் மற்றும் விசாரணையில் கிடைக்கும் ஆதாரங்களின் அடிப்படையில், இறப்பிற்கான உண்மையான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், நேற்று மாலை பிரேத பரிசோதனை செய்து, அம்சாவின் பெற்றோரிடம் 4 பேரின் சடலம் ஒப்படைக்கப்பட்டது.



