தர்மபுரி, ஜூலை 23: சேலத்தில் இருந்து ஓசூர் மற்றும் பெங்களூரு நகரங்களை விரைவாக சென்றடையும் வகையில், தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டையில் இருந்து ஓசூர் இடையே ரூ.2 ஆயிரம் கோடியில் புதிதாக 4 வழிச்சாலை அமைப்பதற்காக தர்மபுரியில் இருந்து ஓசூருக்கு பாலக்கோடு மற்றும் ராயக்கோட்டை வழியாக செல்லும் மாநில நெடுஞ்சாலை (எண் 844 சாலையானது) நான்கு வழிச்சாலையாக தரம் உயர்த்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் ரூ.2,061 கோடி செலவில் செயல்படுத்தப்பட இருக்கிறது. அதியமான்கோட்டையில் இருந்து பாலக்கோடு, ராயக்கோட்டை, ஓசூர் வரை 3 கட்டங்களாக பணிகள் நடந்து வருகிறது. மேலும் ஓசூரில் இருந்து பெங்களூருவை இணைக்கும் பணிகளும் நடந்து வருகிறது.
இந்நிலையில் அதியமான்கோட்டையில் இருந்து ராயக்கோட்டை வரையிலான சாலைப்பணிகள் முடிவடைந்து, கடைமடை அருகே வாகனங்களுக்கு சுங்க கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் ரூ.2 கோடி மதிப்பில் சாலை விரிவாக்கப் பணிகளை மேற்கொண்டுள்ளது. குறிப்பாக சிப்காட் வளாகத்துக்கு வந்து செல்லும் கனரக வாகனங்கள் மற்றும் ஓசூர், கிருஷ்ணகிரி, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்து செல்லும் கனரக வாகனங்கள் நின்று செல்லும் வகையிலும் திட்டமிட்டு விரிவாக்கம் செய்யப்படுகிறது. அதியமான்கோட்டை பட்டர்பிளை பாலம் முதல் சாலை விரிவாக்க பணிகள் நடந்து வந்த நிலையில், தற்போது தர்மபுரி அடுத்த கடகத்தூர் அருகே அல்லியூர் அருகே சர்வீஸ் சாலையை விரிவாக்கம் செய்யும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.



