தர்மபுரி, ஜூலை 23: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 100 கனஅடியாக சரிந்த நிலையில், எதிர்வரும் மாதங்களில் குடிநீர் பற்றாக்குறையை சமாளிப்பதற்கான ஆலோசனை கூட்டம் கலெக்டர் சரவணன் தலைமையில் நேற்று நடந்தது. தர்மபுரி மாவட்டத்தில், புளோரைடு கலந்த நச்சு தன்மை கொண்ட தண்ணீரை குடித்த மக்கள் கறை படிந்த பற்கள், முடக்குவாதம், மூட்டுவலி, காதுவலி போன்ற பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகினர். இந்த நோய் பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்க, ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் கடந்த 2008ம் ஆண்டு, அப்போதைய திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது.
தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் குடிநீர் தேவைகளை கருத்தில் கொண்டு, ரூ.1928.80 கோடியில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின், உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த போது, இத்திட்டத்தை முடிக்கும் தருவாயில் கொண்டு வந்தார். 2013ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, மக்களுக்கு ஒகேனக்கல் கூட்டுகுடிநீரை விநியோகத்தை தொடங்கி வைத்தார்.
இந்நிலையில் தற்போது கோடைகாலம் தொடங்கியதில் இருந்தே, காவிரி ஆற்றில் நீரவரத்து சரிந்தது. நேற்று காலை 6 மணி நிலவரப்படி விநாடிக்கு 100 கனஅடி தண்ணீர் மட்டுமே வந்தது. அந்த தண்ணீரும் சாக்கு மண் மூட்டைகளால் தடுத்து நிறுத்தி, தேக்கி குடிநீருக்கு தண்ணீர் உறிஞ்சப்படுகிறது. இதனிடையே, தென்மேற்கு பருவமழை பொய்த்துள்ளதால், காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்தது. இதனால் காவிரி ஆறு பாறைகளாக காட்சியளிக்கிறது. சில இடங்களில் பாறை இடுக்குகளில் குட்டை போல் தண்ணீர் தேங்கியுள்ளது. மேலும் நீர்வரத்து சரிந்தால், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு குடிநீர் விநியோகிப்பதில் சிக்கல் உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக குறிஞ்சி கூட்டரங்கில், எதிர்வரும் மாதங்களில் ஏற்படக்கூடிய குடிநீர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் வகையில் நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் கிராம ஊராட்சிகளில் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்ய மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடந்தது. கலெக்டர் சரவணன் தலைமை வகித்து பேசியதாவது: மாவட்டத்தில் குடிநீர் விநியோகத்தில் ஏற்படக்கூடிய பழுதுகளை உடனுக்குடன் சரி செய்ய வேண்டும். ஏற்கனவே உள்ள நீராதாரங்களில் நீர் இருப்பினை, நீரோட்ட வல்லுனர்களை கொண்டு கூட்டாய்வு மேற்கொண்டு, அதனடிப்படையில் திறந்தவெளி கிணறுகள் தூர்வாருதல் மற்றும் ஆழ்துளை கிணறுகளை ஆழப்படுத்துதல், புதிய அத்தியாவசிய குடிநீர் பணிகளுக்கான சாத்தியக்கூறுகளை கண்டறிய வேண்டும். குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், நீரேற்று நிலையங்கள் மற்றும் மேல்நிலைத் தொட்டிகளை முறையாக இயக்க வேண்டும். மாவட்டத்திற்கு உட்பட்ட நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் கிராம ஊராட்சிகளில் குடிநீர் பற்றாக்குறை இருப்பின், அவற்றை நிவர்த்தி செய்து, போதுமான அளவு குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும். பொதுமக்களுக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில், சீரான குடிநீர் வழங்கப்படுவதை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு கலெக்டர் பேசினார். இக்கூட்டத்தில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மதுமதி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் கோவிந்தப்பன், ஊராட்சிகள் உதவி இயக்குநர்கள் விமல் ரவிக்குமார், வேடியப்பன், துணை இயக்குநர் (சுகாதாரம்) மருத்துவர் ராஜேந்திரன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.




