Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஏரி கரையோரம் இறைச்சி கழிவுகள் கொட்டுவதால் மாசு

காரிமங்கலம், ஜூன் 23: காரிமங்கலம் அருகே ஏரி கரையோரம் கொட்டப்படும் இறைச்சி கழிவு, குப்பைகளால் நீர் மாசு அபாயம் ஏற்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம்- பாலக்கோடு ரோட்டில் நாகல் ஏரி அமைந்துள்ளது. சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஏரி, காரிமங்கலம் நகருக்கு நிலத்தடி நீர் ஆதாரமாக உள்ளது. மழை நீர் மட்டுமின்றி, கிருஷ்ணகிரி அணை உபரி நீர் ஏரிக்கு வருவதால், இதன் அருகேயுள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று, விவசாயத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறது.

மெயின் ரோட்டில் உள்ள இந்த ஏரி, சுமார் ரூ.77 லட்சம் மதிப்பில் சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டதாக, பேரூராட்சி நிர்வாகம் கூறிவரும் நிலையில், சீரமைக்கப்பட்ட ஏரிக்கரை பகுதியில் குப்பைகள் கொட்டும் இடமாக மாறி உள்ளது. ஏரியின் மேற்கு கரை பகுதியில், மெயின் ரோட்டின் அருகாமையில் ஏரி பகுதியில் இறைச்சி கழிவுகள் மற்றும் முட்டை ஓடுகள், குப்பைகள் கொட்டப்பட்டு சுகாதார சீர்கேட்டிற்கு அடையாளமாக உள்ளது. இப்பகுதியில் இயங்கி வரும் டாஸ்மாக் கடை மற்றும் அருகேயுள்ள கடைகளில், பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் டம்ளர்கள் உள்பட பிளாஸ்டிக் கழிவுகளும் ஏரியில் கொட்டப்பட்டு வருகிறது.

இதனால் ஏரிக்கரை பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் நீர் மாசும் ஏற்பட்டு வருகிறது. பலமுறை கோரிக்கை விடுத்தும், பேரூராட்சி நிர்வாகம் அலட்சிய போக்குடன் செயல்பட்டு வருகிறது. எனவே, குப்பைகள் மற்றும் கழிவுகளை ஏரியில் கொட்டுவதை தடுக்க, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.