Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

கால்நடை விவரங்களை சேகரிக்கும் அலுவலர்களுக்கு ஒத்துழைக்க வேண்டும்

தர்மபுரி, ஜூன் 23: தர்மபுரி மாவட்டத்தில் தேசிய டிஜிட்டல் கால்நடை இயக்கம் மூலம், கால்நடைகள் குறித்த விவரங்களை சேகரிக்க வரும் அலுவலர்களுக்கு, ஒத்துழைப்பு வழங்கும்படி மாவட்ட கலெக்டர் சரவணன் கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கால்நடைகளின் காதுவில்லைகளில் உள்ள 12 இலக்க அடையாள எண்ணை பதிவு செய்து, அந்த கால்நடையின் முழு விவரத்தையும் மின்னணு தகவலாக பதிவேற்றம் செய்வதற்காக கால்நடை பராமரிப்புத்துறை மூலம், தேசிய டிஜிட்டல் கால்நடை இயக்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த இயக்கத்தின் கீழ், தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கால்நடைகளுக்கு கோமாரி நோய், தோல்கழலை நோய், அடைப்பான் நோய் ஆகியவற்றுக்கான தடுப்பூசி பதிவுகள், நோய் கிளர்ச்சி அறிக்கை, பால் உற்பத்தி பதிவு விவரங்கள் ஆகிய விவரங்கள் சேகரிக்கப்பட்டு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இதன் அடிப்படையில் கால்நடைகளின் செயற்கைமுறை கருவூட்டல், கால்நடை காப்பீட்டு விவரம், சினையுறு சதவீதம், கன்று ஈன்ற விவரம், கன்று பிறப்பு விகிதம், உரிமையாளர் பதிவு மற்றும் பெயர் மாற்றம் ஆகியவையும் பருவத்துக்கேற்ப மேற்கொள்ளப்படும்.

இந்த தரவுகள் பதிவேற்றம் செய்யும் பணியின்போது, கால்நடை உரிமையாளரின் செல்போன் எண், ஆதார் எண் ஆகியவற்றை ஒருங்கிணைத்து கால்நடை வளர்ப்போரின் செல்போனுக்கு வரும் கடவுச்சொல் மூலம், கால்நடைகளின் முழு விவரம் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இந்த இணையதள பதிவேற்றம் மூலம், கால்நடைகள் கொள்முதல் மற்றும் விற்பனை செய்யும் போது கால்நடைகள் குறித்த முழு விவரங்களை கால்நடை வளர்ப்போர் எளிதாக தெரிந்து கொள்ள முடியும். எனவே, இப்பணி தொடர்பாக கிராமங்களுக்கு கால்நடை பராமரிப்புத்துறை அலுவலர்கள் வரும்போது, கால்நடை வளர்ப்போர் தங்களின் செல்போன் எண்ணுக்கு வரும் கடவுச்சொல்லை பகிர்வதுடன், கால்நடைகள் குறித்து கேட்கப்படும் விவரங்களையும் அளித்து ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.