தர்மபுரி, ஜூன் 23: தர்மபுரி அருகே எண்ணேகொல்புதூர் -தும்பலஅள்ளி நீர்பாசன திட்டம் பல மாதமாக கிடப்பில் உள்ளது. இதையடுத்து, கட்டாய நில எடுப்பு சட்டத்தின் கீழ் நிலம் எடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே தும்பல அள்ளி அணை உள்ளது. 1986ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட இந்த அணைக்கட்டின் மூலம், 2617 ஏக்கர் நிலம் நேரடியாக பாசன வசதி பெறும். இதுதவிர பல ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்கு அணை மூலம் நிலத்தடி நீராதாரம் பெருகும். ஆனால், இந்த அணைக்கான நீர்வரத்து, ஆதாரங்கள் தடைபட்ட நிலையில் கடந்த 18 ஆண்டுகளாக அணை வறட்சியின் பிடியில் சிக்கியது.
இந்நிலையில், கடந்த 2022ம் ஆண்டு பெய்த கனமழையால் அணை நிரம்பியது. இதனால், 18 ஆண்டிற்கு பிறகு கரும்பு, நெல் சாகுபடி செய்யப்பட்டது. இந்த அணைக்கு ஆண்டுதோறும் தண்ணீர் வருவதற்கு எண்ணேகொல்புதூர் -தும்பலஅள்ளி கால்வாய் திட்டம் கடந்த 2023ம் ஆண்டு தொடங்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம், கேஆர்பி அணையின் வலது கால்வாயில் எண்ணேகொல்புதூர் பகுதியில் இருந்து கால்வாய் நீட்டிப்பு செய்து தும்பல அள்ளி அணைக்கு தென்பெண்ணை ஆற்று நீரை கொண்டு வந்து விவசாயிகள் நலன் காக்க வேண்டும் என தொடர்ந்து 30 ஊராட்சிகளை சேர்ந்த விவசாயிகள், விவசாய அமைப்புகள், அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்தனர்.
இதன் பலனாக தமிழக அரசு இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவித்தது. இதன்படியாக ரூ.233 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. முன்னதாக கடந்த 2016 ஜனவரி 27ம் தேதி ஆய்வு பணிக்காக ரூ.36 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. கட்டாய நில எடுப்பு சட்டத்தின் கீழ் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்திலும், நில ஆர்ஜித பணிகள் மேற்கொள்ள அரசாணை கடந்த 2019ம் ஆண்டு வழங்கப்பட்டது. தர்மபுரி மாவட்டத்தில் எலுமிச்சனஅள்ளி கிராமத்தில் உள்ள 76 நில உரிமையாளர்கள் பேச்சுவார்த்தையின் மூலம் கால்வாய் வெட்டும்பணிக்கு நில தர சம்மதம் தெரிவித்ததின் அடிப்படையில் இழப்பீட்டுத்தொகை வழங்கப்பட்டு, கால்வாய் வெட்டும்பணி நடந்து வருகிறது. அதுவும் குறிப்பாக கடந்த 2022ம் ஆண்டு முதல் நிலம் கையகப்படுத்தும்பணி தீவிரம் காட்டப்பட்டது. பின்னர் கிடப்பில் போடப்பட்டது.
கடந்த 2023ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திட்டம் மொத்தம் 53 கிலோ மீட்டர் கால்வாய் வெட்டி அணைக்கு தண்ணீர் கொண்டுவரவேண்டும். அதில் 50 கிலோ மீட்டர் கிருஷ்ணகிரி மாவட்டத்திலும், 3 கிலோ மீட்டர் தர்மபுரி மாவட்டத்திலும் கால்வாய் வெட்ட வேண்டும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நிலம் கொடுத்த இடங்களில் கால்வாய் வெட்டப்பட்டுள்ளது. மீதமுள்ள இடங்களில் நிலம் எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டு, இத்திட்டம் கிடப்பில் உள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் முழுமையாக இடம் எடுக்கப்பட்டு பணிகள் கிடப்பில் உள்ளது. இந்நிலையில் நேற்று பாலக்கோடு தொகுதி எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான கேபி.அன்பழகன் சென்னை தலைமை செயலகத்தில், தர்மபுரி மாவட்ட பொறுப்பு அமைச்சர் ராஜ்குமாரை நேரில் சந்தித்து மனு அளித்தார்.
அந்த மனுவில், கிருஷ்ணகிரி மாவட்டம், தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே எண்ணேகொள்புதூரில் உள்ள தடுப்பணையிலிருந்து, தர்மபுரி மாவட்டம், தும்பலஅள்ளி அணைக்கு தண்ணீர் கொண்டு வரும் வழியில் அம்மன் ஏரி முதல் நரியன அள்ளி ஏரி வரை 36 ஏரிகளுக்கும் கால்வாய் அமைத்து தண்ணீர் நிரப்பும் திட்டத்தினை நிறைவேற்ற பணியினை மேற்கொள்ள டெண்டர் விடப்பட்டும் இதுவரை இப்பணியானது முடிக்கப்படாமல் நிலுவையில் உள்ளது. இத்திட்டமானது பாலக்கோடு மற்றும் காரிமங்கலம் மட்டுமல்லாது தர்மபுரி மாவட்டத்தில் வசிக்கும் விவசாய பெருமக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும், நிலத்தடிநீரை உயர்த்தவும் மிக முக்கியமான திட்டமாகும். எனவே பொதுமக்களின் நலன் கருதி, இப்பணியினை விரைந்து முடிக்க ஆவன செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
அப்போது, பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி எம்எல்ஏ மரகதம் வெற்றிவேல், பாலக்கோடு வடக்கு ஒன்றிய செயலாளர் செந்தில், காரிமங்கலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சரவணன், முன்னாள் கூட்டுறவு ஒன்றிய தலைவர் பொன்னுவேல் மற்றும் கட்சியினர் உடனிருந்தனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், கிருஷ்ணகிரி மாவட்டம் எண்ணேகொல் புதூரில் இருந்து வலதுபுறக்கால்வாய் மூலம் தர்மபுரி மாவட்டம் தும்பலஅள்ளி அணைக்கு 50.65 கிலோ மீட்டர் தூரத்திற்கும், எண்ணேகொல் புதூர் இடதுபுறக்கால்வாய் மூலம் பாலக்கோடு படேதலாவ் ஏரிக்கு 22.67 கிலோ மீட்டர் தூரத்திற்கும் புதிய கால்வாய் வெட்டுவதற்கு ரூ.233.34 கோடி நபார்டு திட்டத்தின் மூலம் நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் கடந்த 2023ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது.
குறிப்பாக, இழப்பீடு தொகை வழங்கப்பட்ட இடங்களிலும், அரசு நிலங்களில் கால்வாய் அமைக்கும் பணி நடந்தது. குறிப்பாக, பெல்லம்பள்ளி, கூலியாத்தம், அகரம், கத்தேரி, குண்டல்பட்டி, மிட்டஅள்ளி, பன்னிஅள்ளி உள்ளிட்ட இடங்களில் கால்வாய் வெட்டும்பணி முடிந்துள்ளது. நிலம் தராத இடங்களில் கால்வாய் வெட்டப்படவில்லை. கட்டாயம் நில எடுப்பு திட்டத்தின் கீழ் நிலத்தை எடுத்து கால்வாய் அமைக்கும் பணி விரைவில் நடக்கும். எண்ணேகொல்புதூர் - வலது, இடதுபுற கால்வாய் மூலம் தர்மபுரி மாவட்டத்தில் மொத்தம் 33 ஏரி, ஒரு அணை முழுமையாக பயனடையும். மொத்தம் 3400 ஏக்கர் பாசன வசதி பெறும் என்றனர்.
