பென்னாகரம், மே 23: பென்னாகரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளிகளில், ஏழை மாணவர்களுக்கு 1 கி.மீ., தூரத்தில் வசிக்க வேண்டும் என்கின்ற தூர விதிமுறை காரணமாக 25 சதவீத ஒதுக்கீட்டில் இடம் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, கிராமப்புறங்களில் வசிக்கும் மாணவர்களுக்கு இந்த விதிமுறையை தளர்த்தி, சேர்க்கை அளிக்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்ைக விடுத்துள்ளனர். கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ், பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு, தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.
இதற்கான சேர்க்கை நடைமுறைகள் தற்போது நடைபெற்று வருகிறது. தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் வசிக்கும் பெற்றோர், பள்ளிகளை தேர்வு செய்வதில், தூர வரம்பு விதிமுறையால் தங்களுக்கு சிரமம் ஏற்படுவதாக தெரிவித்துள்ளனர். குறிப்பாக பென்னாகரம் நகர பகுதிகளில் மட்டுமே, தனியார் பள்ளிகள் உள்ளது. இப்பள்ளிகளில் ஒரு கி.மீ., தூரத்திற்குள் வசிக்கும் குழந்தைகளின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது. ஒகேனக்கல் மற்றும் தாசம்பட்டி, ஏரியூர், நாகதாசம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த குழந்தைகளின் விண்ணப்பங்கள், ஒரு கி.மீ., சுற்றளவில் வசிக்கப்பட வேண்டும் என்ற தூர விதிமுறை காரணமாக நிராகரிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர்கள் கூறுகையில், `கடந்த 10 ஆண்டுக்கு மேலாகவே கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் ஏழை மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டது. 5 முதல் 10 கி.மீ., தூரப் பகுதியில் இருந்தாலும், கடந்த காலங்களில் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு விரும்பிய பள்ளியில் சேருவதற்கு இடங்கள் ஒதுக்கப்பட்டது. ஆனால், தற்போது தூர விதிமுறை காரணமாக, பெரும்பாலான மாணவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதனால், குழந்தைகளுக்கு விரும்பிய பள்ளிகளில் சேர்க்கை கிடைக்கவில்லை,’ என்றனர்.
பென்னாகரம், ஏரியூர் சுற்றியுள்ள அனைத்து தனியார் பள்ளிகளிலும், மாணவர் சேர்க்கைக்கான இடங்கள் காலியாக உள்ளன. ஆனால், நிரப்பப்பட வேண்டிய ஏழை மாணவர்கள், ஒரு கி.மீ., தூரத்தை காரணம் காட்டி விதிமுறையை கூறி நிராகரிக்கப்பட்டுள்ளனர். ஒரு கி.மீ., விதிமுறை என்பது நகர்ப்புறங்களுக்கு மட்டுமே பொருந்தும், கிராமப்புறங்களுக்கு பொருந்தாது என்பதை கருத்தில் கொண்டு, மாணவர்களுக்கு சேர்க்கை வழங்க வேண்டுமென அரசு மற்றும் கல்வித்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


