காரிமங்கலம், மே 22: காரிமங்கலம் வட்டாரத்தில் திருட்டு டீசல் விற்பனை அதிகரித்துள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் இரவு பகலாக அதிகாரிகள் ஆசியுடன் சட்ட விரோதமாக விற்பனை நடந்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் சட்ட விரோத திருட்டு டீசல் விற்பனை கொடிகட்டி பறந்து வருகிறது. தர்மபுரி-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் திருட்டு டீசல் விற்பனை மையங்கள், அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருந்து வந்த நிலையில், தற்போது 40க்கும் மேற்பட்ட இடங்களில் திருட்டு டீசல் விற்பனை ஜோராக நடந்து வருகிறது. மாட்லாம்பட்டி, பெரியாம்பட்டி, பொன்னேரி, கெரகோடஅள்ளி பைபாஸ் ரோடு ஆகிய பகுதிகளில் திருட்டு டீசல் விற்பனை மையங்களாக செயல்படுகிறது.
வெளி மாநிலத்துக்கு செல்லும் லாரி, ட்ரைலர் போன்ற வாகனங்களை மறைவான இடத்தில் நிறுத்தி அதிலிருந்து டீசல் திருடப்படுகிறது. இவ்வாறு திருடப்படும் டீசலுடன் கெமிக்கல் கலந்து, கள்ள மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. லோக்கல் வாகனங்கள் மற்றும் டிராக்டர்கள் போன்ற வாகனங்களுக்கு இரவு பகலாக 24 மணி நேரமும் டீசல் விற்பனை செய்யப்படுகிறது. திருட்டு டீசல் விற்பனைக்காக குடிசை மற்றும் ஷெட் அமைத்து, காலி குடங்களை சிக்னல் விளக்கு போல் அமைத்து டீசல் திருட்டு விற்பனையை குடிசை தொழிலாக மாற்றிவிட்டனர். கடந்த சில வருடங்களுக்கு முன்பு, இப்பகுதியில் திருட்டு டீசல் விற்பனையை தடுத்து நிறுத்த முயன்ற வருவாய்த்துறை அதிகாரிகள் சரமாரியாக தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனால் திருட்டு டீசல் விற்பனையை தடுக்காமல் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.தவிர காரிமங்கலம் வழியாக செல்லும் பெரும்பாலான லாரிகளில் இருந்து இரும்பு கம்பிகள் மற்றும் பருப்பு, அரிசி ஆகியவை திருடப்பட்டு விற்பனை செய்யபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சட்டவிரோத திருட்டு டீசல் விற்பனை குறித்து பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள், பொதுமக்கள் என பலரும் தொடர்ந்து புகார் தெரிவித்தும், அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாவட்ட நிர்வாகம் உரிய கவனம் செலுத்தி, திருட்டு டீசல் விற்பனையை தடுத்து நிறுத்துவதுடன் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


