Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

25 சதவீத இடஒதுக்கீட்டில் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை

தர்மபுரி, மே 22: தர்மபுரி மாவட்டத்தில், கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டில் 2,636 மாணவர்கள் சேர்க்கை இன்று முதல் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின், வரும் ஜூன் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகள், பள்ளிகளில் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசு, தனியார் பள்ளிகளில் 12 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானதை அடுத்து, 11ம் வகுப்பு, 6ம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது. தமிழகத்தில் குழந்தைகளுக்கான இலவச கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தின்படி, பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ-மாணவிகள், தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டில் சேர வழிவகை செய்யப்படுகிறது. அவ்வாறு சேரக்கூடிய மாணவ-மாணவிகளுக்கு, கல்வி கட்டணத்தை அரசே செலுத்தி வருகிறது.

இதற்கான மாணவர் சேர்க்கை ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. இந்நிலையில், 2026-2027ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை, இன்று (22ம் தேதி) தொடங்குகிறது. தர்மபுரி மாவட்டத்தில் தனியார் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க, நேற்று தர்மபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜோதிசந்திரா தலைமையில், ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட கல்வி அலுவலர், தனியார் பள்ளிகள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் இடைநிலை கல்வி அலுவலர்கள் கலந்து கொண்டனர். இவர்களுக்கு அறிவுரைகள் மற்றும் வழிகாட்டுதல் நெறிமுறைகளை, முதன்மை கல்வி அலுவலர் வழங்கினார்.

தர்மபுரி மாவட்டத்தில், 25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ், தனியார் பள்ளிகளில் சேர, 4,844 விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இதில் தகுதியுள்ள விண்ணப்பங்கள் 2636 ஆகும். இந்த தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் இட ஒதுக்கீடு மூலம் சேர்க்கப்பட உள்ளனர். அதில் போட்டிகள் இருந்தால், குலுக்கல் முறையில் மாணவர்கள் சேர்க்கை நடக்கும். இன்று (22ம் தேதி) கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, 25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் பள்ளியில் சேர்க்கை தொடங்கி, வரும் 27ம் தேதி வரை நடக்கிறது. மாணவர் சேர்க்கை பணி, தர்மபுரி மாவட்டத்தில் எந்த புகாருக்கும் இடம் அளிக்காத வண்ணம், தேவையான அலுவலர்களை நியமித்து, ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது என முதன்மை கல்வி அலுவலர் ஜோதி சந்திரா தெரிவித்தார்.