தர்மபுரி, ஜூலை 21: கர்நாடக மாநிலத்தில் இருந்து பீன்ஸ் வரத்து அதிகரித்ததால், தர்மபுரி உழவர் சந்தை மற்றும் காய்கறி மார்க்கெட்டில் 10 நாளில் கிலோவுக்கு ரூ.20 வரை விலை குறைந்துள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் நாட்டு காய்கறிகள் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. ஆனால், இங்கிலீஸ் காய்கறிகளான கேரட், பீன்ஸ், பீட்ரூட், காலிபிளவர், குடை மிளகாய், முட்டைக்கோஸ், பிரக்கோலி, சௌசௌ, பச்சைப்பட்டணி, நூக்கோல், உருளைக்கிழங்கு போன்ற காய்கறிகள், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்தும், ஓசூர் உழவர் சந்தை மற்றும காய்கறி மார்க்கெட்டில் இருந்து விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
தர்மபுரி உழவர் சந்தையில், கடந்த சில வாரங்களாகவே நாட்டு காய்கறிகள் மற்றும் இங்கிலீஸ் காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது. தற்போது கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து, தர்மபுரிக்கு பீன்ஸ் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கடந்த 1ம் தேதி ஒரு கிலோ பீன்ஸ் ரூ.88க்கு விற்பனையானது. 10ம் தேதி ரூ.96ஆக உயர்ந்தது. இந்த நிலையில், நேற்று முன்தினம் ரூ.84 ஆக இருந்த பீன்ஸ் விலை, நேற்று கிலோ ரு.75க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச்சென்றனர்.



