தர்மபுரி, ஜூலை 20: தர்மபுரி பாரதிபுரம்- வெண்ணாம்பட்டி ரயில்வே மேம்பால பணிகள் ரூ.36.15 கோடி மதிப்பீட்டில் நடந்து வருகிறது. இப்பணிகள் கடந்த சில மாதங்களாக மந்த கதியில் நடக்கிறது. இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டு, வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தர்மபுரி ரயில் நிலையம் தென்மேற்கு ரயில்வே துறையின் பெங்களூரு கோட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. தர்மபுரி ரயில் நிலையம் வழியாக சேலம், ஈரோடு, திருச்சி, மயிலாடுதுறை, நாகர்கோவில், தூத்துக்குடி உள்ளிட்ட மேற்கு மற்றும் தென் மாவட்டங்களை இணைக்கும் வகையில் ரயில்வே பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதில், தர்மபுரியில் மட்டும் பிரதான நகரங்களை இணைக்கும் முக்கிய 4 இடங்களில் ரயில்வே பாதையை கடந்து சாலை செல்கிறது.
வெண்ணாம்பட்டி, குமாரசாமிப்பேட்டை, கடகத்தூர், அதியமான்கோட்டை ரயிவே கேட்டை கடந்தபடி இந்த ரயில் பாதை செல்கிறது. வெண்ணாம்பட்டியை தவிர மீதமுள்ள 3 இடங்களிலும் ரெயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டு, பயன்பாட்டில் உள்ளது. வெண்ணாம்பட்டி ரயில்வே கேட் மேம்பாலம் கட்டும்பணிகள் மட்டும் நடக்காமல் கிடப்பில் இருந்தது. வெண்ணாம்பட்டி ரயில்வே கேட், தர்மபுரி ரயில் நிலையம் அருகே அமைந்துள்ளதால், அடிக்கடி கேட் மூடப்படுகிறது. இதனால், அவ்வழியே செல்லும் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருப்பது வாடிக்கையாக இருந்து வருகிறது. குறிப்பாக, பள்ளி நேரங்களில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நிற்பது வாடிக்கையாக உள்ளது.
இந்த ரயில்வே கேட் பாதையில் பயணிகள் ரயில், விரைவு ரயில், சரக்கு ரயில்கள் கடந்து செல்லும் போது, நாளொன்றுக்கு 36 முறை இப்பாதை அடைத்து திறக்கப்படுகிறது. அப்போது 15 நிமிடங்களும், சில ரயில்கள் கடக்கும்போது சுமார் 30 நிமிடங்களும் ஆவதால், தர்மபுரி நகரிலிருந்து வெண்ணாம்பட்டி குடியிருப்புப் பகுதி, ஆயுதப்படை குடியிருப்புப் பகுதி, குள்ளனூர், தோக்கம்பட்டி ஆகிய பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் இருபுறமும் நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்கின்றன. பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமத்தைப் போக்கிட, வெண்ணாம்பட்டி ரயில்வே கேட் அருகே ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்களும், அரசியல் கட்சிப் பிரதிநிதிகளும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கடந்த திமுக அரசு மேம்பாலம் அமைக்க ரூ.36.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. பின்னர், அதற்கான பணிகள் நடந்தது. இந்த பணிகள் வேகமாக நடந்து வந்தது. ஆனால், கடந்த இரண்டு மாதமாக பணிகள் மந்த கதியில் நடக்கிறது. மேலும், மாநில அரசு தரப்பில் மேம்பாலத்திற்கான பில்லர்கள் எழுப்பிய நிலையில் நிற்கிறது. ஆனால், ரயில்வே துறை சார்பில் தண்டவாளம் குறுக்கே அமைக்க வேண்டும். மேம்பாலம் பணி இதுவரை தொடங்க வில்லை. இதனால், பாரதிபுரம் -வெண்ணாம்பட்டி ரயில்வே பாலம் பணிகள் தாமதமாகி வருவதால், வாகன ஓட்டிகள் பல்வேறு சிரமத்திற்கள்ளாகியுள்ளனர்.
எனவே, ரயில்வே மேம்பாலம் பணிகளை விரைப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், `தர்மபுரி பாரதிபுரம் 66 அடி சாலை - வெண்ணாம்பட்டிக்கு இடையே ரூ.36.15 கோடி மதிப்பீட்டில் ரயில்வே மேம்பாலம் கட்டப்படுகிறது. ஆட்சி மாற்றத்தால் அதிகாரிகளும் மாற்றப்பட்டுள்ளனர். அதனால், பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே, உரிய பரிசீலனை செய்து பாரதிபுரம் -வெண்ணாம்பட்டி ரயில்வே மேம்பால பணிகள் விரைவுபடுத்தப்படும்,’ என்றனர்.



