காரிமங்கலம், மே 20: தர்மபுரி மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம், நேற்று காரிமங்கலம் திமுக அலுவலகத்தில் நடந்தது. அவைத் தலைவர் மனோகரன் தலைமை வகித்தார். இதில் மாவட்ட செயலாளர் பழனியப்பன் கலந்துகொண்டு சட்டமன்ற தேர்தல் முடிவு மற்றும் கூட்டத் தீர்மானங்கள் குறித்து பேசினார். கூட்டத்தில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 103 வது பிறந்தநாள் விழாவை மேற்கு மாவட்டம் முழுவதிலும் சிறப்பாக கொண்டாடுவது. சட்டமன்ற தேர்தல் முடிவு தொடர்பாக காஞ்சிபுரம் எம்பி செல்வம் முத்துவேல் ராமசாமி ஆகியோர் கள ஆய்வு மேற்கொள்ள உள்ள நிலையில், கட்சி நிர்வாகிகள், தங்களது கருத்துக்களை வழங்க வேண்டும்.
கட்சி வளர்ச்சி பணிகளுக்கு உறுதுணையாக இருத்தல், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மக்கள் நலத்திட்டங்களை, புதிய அரசு தொடர்ந்து செயல்படுத்த வலியுறுத்தல், ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையை தவிர்த்து, இருமொழி கல்வி கொள்கையை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
