தர்மபுரி, மே 20: தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு, மேற்கொள்ள வேண்டிய பேரிடர் பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகள் குறித்து, அனைத்து துறை அலுவலர்களுக்கான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு கலெக்டர் சதீஸ் தலைமை வகித்து பேசியதாவது: தர்மபுரி மாவட்டத்தில், தென்மேற்கு பருவமழை காலத்தில் அனைத்து துறைகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும். தாழ்வான பகுதிகளின் விவரப் பட்டியல், அவசர கால போக்குவரத்து வழித்தடங்கள், போக்குவரத்து ஊர்திகளின் விவரங்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். துறை அலுவலர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள நீர் நிலைகள் பற்றிய விவரப் பட்டியல் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
பருவமழை காலங்களில் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பாதுகாத்து கொள்ளும் பொருட்டு, முன்னெச்சரிக்கை மாதிரி ஒத்திகையை, அபாயகரமான பகுதிகளில் பொதுமக்களுக்கு நடத்தி காட்டுமாறு கோட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மீட்பு பணியின் போது தேவைப்படும் உபகரணங்களை தேவையான அளவில் இருப்பில் வைத்துக்கொள்ள வேண்டும். சமுதாயக் கூடங்கள், திருமண மண்டபங்கள், பள்ளிகள் பற்றிய விவரப் பட்டியல் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மழை வெள்ள காலத்தில் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்ய தேவையான வாகனங்கள், தண்ணீர் டேங்க்குகள், போர்டபிள் ஜெனரேட்டர்கள், டார்ச் லைட்கள், உணவு சமைக்க பாத்திரங்கள், காஸ் அடுப்புகள், ரேஷன் கடைகளில் தேவையான உணவு பொருட்களின் இருப்பு தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
சாலையோர மரங்கள் சேதமடைந்தால் மீட்பு பணிக்கு பொக்லைன், புல்டோசர் மற்றும் மரங்களை வெட்டும் இயந்திரங்கள் ஆகியவற்றை நல்ல நிலையில் பராமரித்து வைத்திருக்க வேண்டும். நீர்த்தேக்கம் மற்றும் ஏரிகளில் தண்ணீர் நிரம்பும் தருணத்தில், உபரிநீரை வெளியேற்றக்கூடிய சூழ்நிலை வரும் போது, அதனை முன்கூட்டியே பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் தெரிவித்து, தாழ்வான இடங்களில் வசிக்கும் மக்களை, மேடான பகுதியில் தங்க வைத்து, அவர்களுக்கு தேவையான உதவிகளை உடனடியாக செய்யுமாறு பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மற்றும் தாசில்தார்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அணைக்கட்டுகள், ஏரிகளின் கரைப்பகுதியில் தேவையான அளவிற்கு மணல் மூட்டைகளை அடுக்கி தயார் நிலையில் வைக்க வேண்டும்.
அவசர காலங்களில் உதவிக்கு அழைக்க சுய உதவி குழுக்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பட்டியல், தொலைபேசி எண்கள் பட்டியல் தயார் நிலையில் வைத்து இருக்க வேண்டும். மழைக்காலம் தொடங்கும் முன்னரே குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்காத வண்ணம் தெருக்களை சீர்படுத்த வேண்டும். கழிவுநீர் கால்வாய்களை துர்வார வேண்டும். ஆர்டிஓ.,க்கள், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கி, உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள் பாதிப்பு உள்ளிட்ட சேதங்கள் பற்றிய தகவல்களை, கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 க்கு தொடர்புகொண்டு தெரிவிக்கலாம். இவ்வாறு கலெக்டர் சதீஸ் தெரிவித்தார். இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கவிதா, அனைத்து துறை முதல்நிலை அலுவலர்கள் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
