தர்மபுரி, மே 20: தர்மபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, ஒகேனக்கல், பென்னாகரம் வனப்பகுதியில் இருந்து உணவு, தண்ணீர் தேடி வெளியே வரும் யானைகளை கண்காணிக்க, வனத்துறை சார்பில் 11 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தர்மபுரி மாவட்டத்தில் 8 வனச்சரகங்கள் உள்ளன. இதில் பாலக்கோடு, ஒகேனக்கல், பென்னாகரம் வனச்சரக வனப்பகுதிகளில் யானைகள் உள்ளன. குறிப்பாக பாலக்கோடு வனச்சரகத்தில் யானைகள் அதிகம் உள்ளன. காவிரி, சின்னாறு படுகை பகுதிகள் யானைகளின் வாழ்விடமாக உள்ளது. ஒகேனக்கல் காவிரி ஆற்று படுகை பகுதியில் யானைகள் ஆண்டு முழுவதும் உலா வருகிறது. மேலும், காவிரியின் மறு கரைப்பகுதியில் கர்நாடகா மாநிலம் உள்ளதால், அங்கிருந்தும் யானைகள் கூட்டம் அடிக்கடி தமிழக எல்லைக்குள் இடம் பெயர்கின்றன.
ஒகேனக்கல், பென்னாகரம், பாலக்கோடு ஆகிய வனசரகத்தில், 50க்கும் மேற்பட்ட யானைகள் நிரந்தமாக உள்ளன. கோடை காலத்தில் வறட்சி நிலவுவதால் யானைகளுக்கு வனப்பகுதியில் போதிய உணவு, குடிநீர் இல்லாததால், அருகில் உள்ள பகுதிகளுக்கு உணவு, குடிநீர் தேடி அவ்வப்போது வெளியே வருகின்றன. கர்நாடகா யானைகள் மாதேஸ்வரன் மலை, உரிகம், ஜவளகிரி, தேன்கனிக்கோட்டை, ராயக்கோட்டை வழியாக பாலக்கோடு, ஒகேனக்கல், பென்னாகரம் வனப்பகுதிக்கு வருகின்றன. அவ்வாறு யானைகள் வரும் போது வனத்தை ஒட்டியுள்ள கிராமங்களில் புகுந்து அட்டகாசம் செய்கின்றன. கடந்த சில நாட்களாக, பாலக்கோடு வனச்சரகம் கும்மனூர் காப்புக்காடு பகுதியில் 3 காட்டு யானைகள் முகாமிட்டு, சுற்றுவட்டார பகுதிகளான நாயக்கனூர், சின்ன கும்மானூர், காட்டுக்கொட்டாய், பெரியகும்மனூர், பெரியதப்பை, காடு செட்டிபட்டி, சூடானூர், கூலிக்கானூர், நாகனூர், பாலப்பநல்லி, கிட்டம்பட்டி பகுதிக்கு வந்து செல்கின்றன.
இதே போல், எர்ரனஅள்ளி காப்பு காடு பகுதியில் ஒற்றை யானை முகாமிட்டு, கொல்லஅள்ளி, வாழைதோட்டம், செங்கோடப்பட்டி, காவேரியப்பன் கொட்டாய், கூசுகல், எருதுகூடஅள்ளி, பொப்பிடி, நிலகுட்டஅள்ளி, தீபஅள்ளி, பெல்ரம்பட்டி எக்ஸ்ரோடு, காட்டு மாரியம்மன் கோயில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கும் வந்து செல்கிறது. எனவே, கிராம மக்கள் இரவு நேரத்தில் வீடுகளை விட்டு வெளியே நடமாட வேண்டாம். வயல் வெளிகளில் காவலுக்கு சென்று படுக்க வேண்டாம். பயிர்களுக்கு நீர் பாய்ச்ச வயலுக்கு இரவில் செல்ல வேண்டாம். யானை நடமாட்டம் தென்பட்டால், உடனடியாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று வனத்துறையினர் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
அதே போல், ஒகேனக்கல் வனப்பகுதி சாலையில் அடிக்கடி ஒற்றை யானை நிற்பதை காணமுடிகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் அச்சத்துடன் சாலையில் பயணிக்கும் நிலை உள்ளது. ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலா பயணிகள், சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என எச்சரிக்கை செய்யப்படுகிறது. ஒகேனக்கல், பென்னாகரம் சாலையில் யானை, வனவிலங்குகள் நடமாடும் பகுதிகளில் விளம்பர பலகை வைக்கப்பட்டு, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. யானைகள் நடமாட்டம் உள்ள பகுதிகளை கண்டறிந்து, வனக்கோட்டத்தில் 13 பகுதிகள் வேட்டை தடுப்பு முகாம்கள் உள்ளன. யானைகள் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
யானைகள் காட்டை விட்டு வெளியே வருவதை கண்காணித்து, மீண்டும் வனத்திற்குள் விரட்டுவதற்கு, தனியாக கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. ஒரு குழுவிற்கு 5க்கும் மேற்பட்டோர் உள்ளனர். குழுவில் உள்ள அனைவருக்கும் நவீன ரக டார்ச் லைட் வழங்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ மீட்டர் தூரம் வெளிச்சம் செல்லக்கூடிய நவீன டார்ச் லைட் ஆகும். பாலக்கோடு வனச்சரகத்தில் 5 குழுவும், ஒகேனக்கல், பென்னாகரம் வனச்சரகத்தில் தலா 3 குழுவும் என மொத்தம் 11 குழுக்கள் யானைகள் நடமாட்டத்தை கண்காணிக்க ஈடுபட்டுள்ளன. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது: பாலக்கோடு, ஒகேனக்கல், பென்னாகரம் வனச்சரகத்தில் வனத்தை ஒட்டியுள்ள கிராமங்களில், யானை ஊருக்குள் புகுந்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இரவு நேரத்தில் வெளியில் நடமாடுவது, வீட்டிற்கு வெளியே உறங்குவது, வயதானவர்கள், குழந்தைகள், நோயாளிகள் இரவில் வெளியே வருவது தவிர்க்க வேண்டும். யானைகளை விரட்டுவதில் தனியாக ஈடுபட முயற்சிக்க கூடாது. யானைகள் வழி தவறி வந்ததெனில் உடனே அதை விரட்டுவதற்கு பதில், வனத்துறைக்கு தகவல் தெரிவித்து, வனத்துறை எடுக்கும் முயற்சிகளுக்கு உள்ளூர் மக்கள் உதவிடவேண்டும். வனத்தை ஒட்டிய விளை நிலங்களில் கரும்பு, வாழை, சோளம், மக்காச்சோளம் போன்ற யானைகள் ஈர்க்கும் பயிர்களை தவிர்த்து, யானைகள் விரும்பாத மிளகாய், மஞ்சள், புகையிலைகளை பயிரிட வேண்டும். சட்ட விரோதமாக மின்வேலி அமைப்பது முற்றிலும் கூடாது. அமைத்தால் அது கடும் தண்டனைக்கு உரியதாகும். யானைகளை கண்காணித்து விரட்ட பாலக்கோடு, ஒகேனக்கல், பென்னாகரம் வனச்சரகத்தில் 11 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


