அரூர், மே 18: அரூர் தீர்த்தமலை அருகே விவசாய கிணற்றில் தவித்த முதலையை தண்ணீரை முழுவதுமாக வெளியேற்றி, தீயணைப்பு துறையினர் உதவியுடன் வனத்துறையினர் மீட்டனர்.
தர்மபுரி மாவட்டம், அரூர் வட்டம் தீர்த்தமலை அருகே கீழ் செங்கப்பாடி பகுதியைச் சேர்ந்த விவசாயி வெங்கடாசலம். இவர் நேற்று காலை, வழக்கம்போல் தனது தோட்டத்திற்கு சென்றார். அப்போது, அங்குள்ள விவசாய கிணற்றில் முதலை தத்தளித்துக் கொண்டிருப்பதை கண்டு திடுக்கிட்டார். உடனே, இது குறித்து வனத்துறை அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தார். இதன்பேரில், தீர்த்தமலை வனச்சரக அலுவலர் கோகுல் தலைமையிலான வனத்துறையினர், சம்பவ இடம் விரைந்து சென்றனர். பின்னர், தீயணைப்பு துறையினர் உதவியுடன் முதலையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 70 அடி ஆழம் கொண்ட கிணற்றில் தண்ணீர் நிரம்பியிருந்ததால் முதலையை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது.
இதையடுத்து, மோட்டார் மூலம் தண்ணீர் முழுவதையும் வெளியேற்றினர். தொடர்ந்து முதலையை வலைபோட்டு பிடித்து உயிருடன் மீட்டனர். அந்த முதலை சுமார் 6 அடி நீளத்தில், 30 கிலோ எடை கொண்டதாக இருந்தது. தென்பெண்ணையாற்றிலிருந்து 800 மீட்டர் தொலைவில் வெங்கடாசலத்தின் கிணறு உள்ளது. இதை ஒட்டிய சிறு ஓடை ஆற்றுக்கு செல்கிறது. சில மாதங்களுக்கு முன்பு, தீர்த்தமலை பகுதியில் கனமழை பெய்தது. அப்போது, ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், சிறு ஓடை வழியாக முதலை அடித்து வரப்பட்டு கிணற்றுக்குள் விழுந்திருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர். தென்பெண்ணை ஆற்றுப்பகுதியில் தண்ணீர் அதிகமாக இருக்கும் இடத்தில், முதலையை பாதுகாப்பாக விட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
