தர்மபுரி, ஆக.18: தர்மபுரி மாவட்ட கலெக்டர் ஆபீசில் நடைபெற்ற வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டத்தில், 683 மனுக்கள் குவிந்தன. தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக அதியன் கூட்டரங்கில், பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் சரவணன் தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். இதில் சாலை வசதி, குடிநீர் வசதி, பஸ் வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் வேண்டியும், பட்டா வேண்டுதல், சிட்டா பெயர் மாற்றம், புதிய குடும்ப சான்றிதழ், வேலைவாய்ப்பு, முதியோர் ஓய்வூதியத் தொகை, இலவச வீட்டுமனை பட்டா உட்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்தும், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை, உபகரணங்கள் வேண்டியும் மொத்தம் 683 மனுக்கள் பெறப்பட்டன.
இம்மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி, நடவடிக்கை மேற்கொண்டு உரிய தீர்வினை வழங்கும்படி கலெக்டர் சரவணன் உத்தரவிட்டார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மதுமதி, தனித்துணை கலெக்டர் ஷெர்லி ஏஞ்சலா, தர்மபுரி வருவாய் கோட்டாட்சியர் ஜார்ஜ், அரூர் வருவாய் கோட்டாட்சியர் செம்மலை உள்ளிட்ட தொடர்புடைய அரசுத்துறை உயரதிகாரிகள் உடனிருந்தனர்.




