தர்மபுரி, ஆக.18: பிடமனேரி ஏரியை முழுவதுமாக ஆக்கிரமித்த ஆகாயத்தாமரைகளை அடியோடு அப்புறப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். தர்மபுரி அடுத்துள்ள இலக்கியம்பட்டி ஊராட்சியில் 12 வார்டுகள் உள்ளன. இதில், நகராட்சியை ஒட்டியபடி உள்ள பிடமனேரியில், சுமார் 5 ஆயிரம் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் ஏரி உள்ளது. இந்த ஏரியில் பிடமனேரியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் அனைத்தும் கலக்கும் வகையில் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.
இதனால், ஏரியில் எப்போதும் நீர் நிரம்பியவாறு காணப்படுகிறது. முழுவதும் அசுத்தம் நிறைந்ததாக உள்ளது. மேலும், ஏரி முழுவதும் ஆகாயத்தாமரைகள் படர்ந்தவாறு ஆக்கிரமித்துள்ளது. இதனால், ஏரி துர்நாற்றம் வீசுகிறது. எனவே, ஏரியில் விடும் கழிவு நீரை சுத்திகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏரியை மாசு படுத்தும் ஆகாயத்தாமரைகளை அடியோடு அகற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



