Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

கேரளாவிற்கு இறைச்சிக்காக மாடுகள் கடத்தல் அதிகரிப்பு

நல்லம்பள்ளி, ஜூலை 18: தொப்பூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக, கேரள மாநிலத்திற்கு இறைச்சிக்காக கால்நடைகள் கடத்தல் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நல்லம்பள்ளி அடுத்துள்ள தொப்பூர், தர்மபுரி மாவட்டத்தின் எல்லை பகுதியாக உள்ளது. தொப்பூர் வழியாக கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை செல்லக்கூடிய தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இதன் காரணமாக இந்த பகுதியில் தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகிறது. இந்நிலையில் மர்ம கும்பல் ஒன்று ஆந்திரா, ஒடிசா மாநிலத்தில் இருந்து மாடுகள், எருமைகளை ஒட்டுமொத்தமாக வாங்கி கேரள மாநிலத்திற்கு இறைச்சிக்காக அனுப்பி வைக்கின்றனர். மற்ற இடங்களில் ரூ.50,000 மதிப்பிலான எருமையை, கேரள மாநிலத்தில் ரூ.80,000க்கு விற்பனை செய்கின்றனர். இதன் காரணமாக அதிகளவில் எருமை மாடுகளை சட்டத்திற்கு புறம்பாக லாரிகளில் அடைத்தவாறு கொண்டு செல்கின்றனர். அவ்வாறு கொண்டு செல்லும் கால்நடைகளுக்கு தண்ணீர் மற்றும் தீவனம் எதுவுமே கொடுக்காமல், கடும் சித்ரவதை செய்து கொண்டு செல்கின்றனர்.

இதுபற்றி சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: தர்மபுரி மாவட்டத்தின் வழியாக ஆந்திரா, ஒடிசா போன்ற பல்வேறு மாநிலங்களில் இருந்து, எருமை, பசுமாடுகள், நாட்டு மாடுகளை அடிமாட்டு விலைக்கு வாங்கி, கேரள மாநிலத்திற்கு சட்ட விரோதமாக அனுப்பி வருகின்றனர். கால்நடைகளை விற்பனைக்காகவும், மற்ற தேவைகளுக்காகவும் ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்திற்கு ஏற்றிச்செல்லும் பொழுது, உரிய மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும். ஒரு நாளைக்கு கால்நடைகளை 80 முதல் 90 கிலோ மீட்டர் வரைக்கும் மட்டுமே கொண்டு செல்ல வேண்டும். 25 அடி நீளமுள்ள வாகனத்தில் 6 கால்நடைகளை மட்டுமே ஏற்றிச் செல்ல வேண்டும். அவ்வாறு ஏற்றிச்செல்லும் கால்நடைகளுக்கு உரிய தீவனம் மற்றும் தண்ணீர் முறையாக இருக்க வேண்டும் என பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளது.

ஆனால், கால்நடைகளை சட்ட விரோதமாக கொண்டு செல்லும் கும்பல், 25 அடி நீளமுள்ள வாகனத்தில் 30க்கும் மேற்பட்ட கால்நடைகளை ஏற்றி சித்ரவதையுடன் கொண்டு செல்கின்றனர். இதனால் தொப்பூர் பகுதியில் செக்போஸ்ட் அமைத்து, இவ்வழியாக செல்லும் வாகனங்களை சோதனை செய்து அனுப்ப வேண்டும். மேலும், சட்டத்திற்கு புறம்பாக கால்நடைகளை ஏற்றி செல்லும் வாகனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.