தர்மபுரி, ஆக.17: தர்மபுரி மாவட்டம், கே.நடுஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட கொளகத்தூர் ஏரி பல ஆண்டுகளாக வறண்டு கிடப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.தர்மபுரி மாவட்டத்தில், விவசாயத்துக்கு பயன்படும் வகையில் சின்னாறு அணை, கேசர்குளிஅல்லா, நாகாவதி, தொப்பையாறு, தும்பலஅள்ளி, வாணியாறு, வரட்டாறு அணை என மொத்தம் 7 அணைகள் உள்ளன. இந்த அணைகள் மூலம் மொத்தம் 4267.92 மில்லியன் கனஅடி நீரை சேமித்து வைத்துக் கொள்ள முடியும். ஆனால், நடப்பாண்டு வழக்கத்தைவிட மழையளவு குறைந்ததால் அணைகளில் நீர்மட்டம் படுபாதளத்திற்கு சென்றுவிட்டது. ஆண்டுதோறும் ஜனவரி முதல் டிசம்பர் வரை தர்மபுரி மாவட்டத்தில் சராசரியாக 942 மி.மீ., மழை பொழிவது வழக்கம். நடப்பாண்டில் ஜனவரி முதல் மே வரை சராசரியாக 110 மி.மீ., மழை பெய்துள்ளது.
தென்மேற்கு பருவமழை காலம் தொடங்கியுள்ள நிலையில் ஜூன் மாதத்தில் சராசரியாக 72 மி.மீ., மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களில் 182 மி.மீ., மழை, அதாவது ஆண்டு சராசரி மழையில் 20 சதவீதம் மட்டுமே இதுவரை பெய்துள்ளது. இதனால், நடப்பாண்டில் தர்மபுரி மாவட்டம் கே.நடுஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட கொளகத்தூரில் 700 ஏக்கர் பரப்பளவு உள்ள மிகப்பெரிய ஏரி தண்ணீரின்றி வறண்டு முட்புதர்கள் வளர்ந்து காணப்படுகிறது. முட்புதர்கள் மண்டி கிடப்பதால் ஆடு, மாடுகள் மேய்ச்சலுக்கும் பயனற்ற நிலையில் உள்ள கொளகத்தூர் ஏரியை உடனடியாக தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.



