Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

காவிரியில் நீர்வரத்து சரிவு எதிரொலி ஒகேனக்கல்லில் கடும் குடிநீர் தட்டுப்பாடு: சிறுவணிகர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு

தர்மபுரி, ஜூலை 16: காவிரியில் நீர்வரத்து சரிவு எதிரொலியாக, ஒகேனக்கல் சுற்றுலா தலத்தில் 20க்கும் மேற்பட்ட கடைகளுக்கு செல்லும் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு, சிறுவணிகர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல் தமிழகத்தில், பிரசித்தி பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா, கேரளா, புதுச்சேரி, மகாராஷ்டிரா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களிலில் இருந்தும், தினசரி ஆயிரக்கணக்கானோர் சுற்றுலா வருகின்றனர். மெயின் பால்ஸ், மணல்மேடு, கூட்டாறு, சினிபால்ஸ், நீர்வீழ்ச்சி, முதலைப்பண்ணை, தொங்கும் பாலம் மற்றும் ஆலம்பாடி பரிசல்துறை ஆகிய இடங்களை சுற்றிப்பார்த்து செல்கின்றனர். பரிசல் சவாரி மூலம் சுற்றுலா பயணிகளை அருவிகளுக்கு அருகே அழைத்துச் செல்வார்கள். எண்ணெய் குளியல் இங்கு பிரபலம். ஆனால், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் ஒகேனக்கல் காவிரியில் வரும் நீரின் அளவு படிப்படியாக குறைந்து வருகிறது.

அதே வேளையில், வெயில் சுட்டெரித்து வருவதால், வார இறுதி நாட்களில் சுற்றுலா வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நீர்வீழ்ச்சியில் குளிக்கவும், பரிசல் சவாரி செல்வதிலும் சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். சுற்றுலா பயணிகளை எதிர்நோக்கி, ஒகேனக்கல் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் 12 கடைகளும், அதன் அருகில் 7 கடைகளும், சத்திரம் உள்ளிட்ட சுற்றியுள்ள பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட சிறு கடைகளும் உள்ளன. ஓட்டல், பீடா கடை, குளிர்பான விற்பனை கடைகள், டீக்கடை, பழக்கடை, துணிக்கடை, பெட்டிக்கடை உள்ளிட்ட கடைகள் இயங்கி வருகின்றன. இந்த கடைகள் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் சார்பில் ஏலத்தில் குத்தகை விடப்படுகிறது. மூன்று ஆண்டுக்கு ஒருமுறை வாடகை மாற்றி அமைக்கப்படுகிறது. காவிரியில் நீர்வரத்து குறைந்துள்ள நிலையில், கூத்தப்பாடி ஊராட்சி நிர்வாகம் கட்டுப்பாட்டில் உள்ள 20க்கும் மேற்பட்ட கடைகளுக்கு செல்லும் குடிநீர் இணைப்புகளை அதிகாரிகள் நேற்று துண்டித்தனர். இதனால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், சிறு கடை வணிகர்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் கூறுகையில், `கடந்த 15 ஆண்டுக்கு மேலாக ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் பயனடைந்து வருகிறோம். முழுக்க முழுக்க இந்த கடைகளை நம்பியே உள்ளோம். இந்நிலையில், எந்தவித முன்னறிவிப்பும் இன்றி நோட்டீஸ் வழங்காமல் குடிநீர் இணைப்பை துண்டித்து விட்டனர். குடிநீர் கட்டணம் நிர்ணயம் செய்தால் நாங்கள் கட்டவும் தயாராக உள்ளோம்,’ என்றனர். இதுகுறித்து அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டபோது, ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது. காவிரி ஆற்றில் குடிநீர் எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், சிக்கனமாக பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அதே வேளையில், தெரு குடிநீர் குழாய்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய நிலை உள்ளது. ஒகேனக்கல் சுற்றுலா தலத்தில், பொது குடிநீர் குழாய்களும் உள்ளன. குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டதன் காரணமாகவே, கடைகளுக்கு செல்லும் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது. இது தற்காலிகமானது. காவிரியில் நீர்வரத்து அதிகரிக்கும் போது, சீரான குடிநீர் விநியோகத்திற்கு நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றனர்.