Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

போதிய மழை பெய்யாததால் தர்மபுரி மாவட்டத்தில் வறண்டு கிடக்கும் ஏரிகள்: கருவேல முள்செடிகளை அகற்ற எதிர்பார்ப்பு

தர்மபுரி, ஜூன் 16: தர்மபுரி மாவட்டத்தில், போதிய மழை பெய்யாததால் ஏரிகள் வறண்டு கிடக்கின்றன. வறண்டு கிடக்கும் ஏரிகளில் ஆக்கிரமித்துள்ள கருவேல முள்செடிகளை அகற்றி மழைநீர் சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில், பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 74 ஏரிகளும், ஊரகத்துறை கட்டுப்பாட்டில் 640 ஏரி, குளங்களும் உள்ளன. கடந்த ஆண்டு போதிய மழை பெய்யவில்லை. இதனால் ஏரிகளில் தண்ணீர் இருப்பு இல்லை. அணைகள் மூலம் நிரம்பிய ஏரிகளில் மட்டுமே தண்ணீர் குட்டைபோல் உள்ளது. ராமக்காள் ஏரி, பிடமனேரி, இலக்கியம்பட்டி, மதிகோண்பாளையம் ஏரிகளை தவிர, மற்ற ஏரிகளில் தண்ணீர் இல்லை.

அன்னசாகரம் ஏரி, சோகத்தூர், கடகத்தூர், அதியமான்கோட்டை சோழவராயன் ஏரி, ஏலகிரி ஏரி, லளிகம், நார்த்தம்பட்டி, குட்டூர் ஏரிகள், செட்டிக்கரை, மதிகோண்பாளையம், பைசுஅள்ளி, கிருஷ்ணாபுரம் ஏரி, கொமத்தாம்பட்டி உள்ளிட்ட பல்வேறு ஏரிகளில் தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கின்றன. தர்மபுரி மாவட்டத்தில், பல்வேறு ஏரிகளில் கருவேல மரங்கள் முளைத்து காடு போல் உள்ளன. இந்த முட்செடிகள் ஆக்கிரமிப்பால், மழைநீர் சேமிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. மேலும் பிடமனேரி, ராமக்காள், இலக்கியம்பட்டி ஏரியில் குப்பை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன.

இதுபோல் சோகத்தூர், ராமக்காள் ஏரிக்கரையில் குப்பைமேடாக காட்சியளிக்கிறது. கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ராமன்நகர் தடுப்பணை, அழகாபுரி முதல் மதிகோண்பாளையம் வரை உள்ள சனத்குமார் ஆற்றின் கால்வாயில் குப்பை கொட்டப்படுகிறது. இதனால், நீர்நிலைகள் மாசடைந்து நிலத்தடி நீர்மட்டமும் பாதிக்கப்படுகின்றன. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், `தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்களை பொதுப்பணித்துறையும், ஊரகத்துறையும் முறையாக பராமரிக்கவில்லை. இதனால் ஏரி மற்றும் நீர்நிலைகளில் குப்பைகளாகவும், பிளாஸ்டிக் கழிவு பொருட்களாகவும் காணப்படுகிறது.

அடுத்த தலைமுறைக்கு ஏரி மற்றும் நீர்நிலைகளை பாதுகாப்பாக விட்டு செல்ல வேண்டும் என்றால், உடனே கருவேல மரங்களை அகற்றி ஏரிகளை தூர்வார வேண்டும். மேலும் நீர்வரத்து கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்,’ என்றனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், `தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மழைநீர் சேமிக்கும் வகையில், ஏரிகளில் உள்ள கருவேல மரங்கள் அகற்றப்படும். ஏற்கனவே அரசு மற்றும் தன்னார்வலர்கள் மூலம் 245க்கும் மேற்பட்ட ஏரிகள் தூர்வாரப்பட்டுள்ளன. 248 ஏரி, குளங்கள் தூர்வார அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது,’ என்றனர்.

வயல்களில் தேங்கும் நீரால் பயிர்கள் பாதிப்பு

தர்மபுரி மாவட்டத்தில், கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அன்னசாகரம், எரங்காட்டுக் கொட்டாய் பகுதியில் இருந்து அன்னசாகரம் ஏரிக்கு வரும் மழைநீர் கால்வாயில், ஒரு சிலர் மண் கொட்டி அடைப்பு ஏற்படுத்தியதால், தண்ணீர் ஏரிக்கு செல்லாமல் விவசாய வயலில் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக பார்ம்ரோஸ் பயிரிடப்பட்ட வயலில், கடந்த 5 நாட்களாக மழைநீர் வடியாமல் தேங்கி நிற்கிறது. அன்னசாகரம் ஏரிக்கு செல்லும் நீர்வழிப்பாதையில் அடைப்பு ஏற்படுத்திய நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து, அடைப்பை அகற்றினால் மட்டுமே, வயலில் இருந்து தண்ணீர் வடியும். இதுகுறித்து கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.