Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

3 ஆண்டுக்கு பின் நிரம்பிய இலக்கியம்பட்டி ஏரி

தர்மபுரி, ஜூன் 15: தர்மபுரி இலக்கியம்பட்டி ஏரி பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கோடை மழையினால் ஏரி நிரம்பி, உபரிநீர் சனத்குமார் ஆற்றில் செல்கிறது. இந்த ஏரி மூன்று ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பியதையடுத்து விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தர்மபுரி -சேலம் மெயின் ரோட்டில் இலக்கியம்பட்டி ஏரி உள்ளது. இந்த ஏரி 4.5 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரிக்கு வத்தல்மலை அடிவாரம் நீர்பிடிப்பு பகுதியாக உள்ளது. ஆண்டு முழுவதும் ஏரியில் தண்ணீர் இருந்துகொண்டே இருக்கும். கடந்த சில ஆண்டுகளாக வத்தல்மலையில் இருந்து வரும் மழைநீர் தடைப்பட்டது. நீர்வரும் கால்வாய் ஆங்காங்கே ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது.

மழைநீர் சீராக ஏரிக்கு வருவதில்லை. குடியிருப்பு பகுதிகளிலிருந்து வெளியேவரும் கழிவுநீர் மற்றும் மழைநீர் மட்டுமே இலக்கியம்பட்டி ஏரிக்கு தற்போது நீர்பிடிப்பு பகுதியாக உள்ளது. தற்போது கழிவுநீர் ஏரியில் கலப்பதால், இந்த ஏரியில் எப்போதும் தண்ணீர் இருந்துக்கொண்டே இருக்கும். கோடைக்காலம் என்பதால் கடும்வெயிலால் ஏரியில் தண்ணீர் குட்டை போல் காணப்பட்டது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக இலக்கியம்பட்டி ஏரியை சுற்றுவட்டார பகுதியில் கன மழை பெய்தது. இந்த மழையினால் ஏரி நேற்று நிரம்பியது.

உபரிநீர் சனத்குமார் ஆற்றில் கலக்கிறது. இதுகுறித்து விவசாயிகள், பொதுமக்கள் கூறுகையில், `இலக்கியம்பட்டி ஏரியை சுற்றி மரங்கள் நடப்பட்டுள்ளது. ஏரியின் நடுவில் தீவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. கொக்குகள், நீர் பறவைகள், வெளிநாட்டு பறவைகள் வந்து வசிக்கும் வகையில் இந்த ஏரி உள்ளது. இந்த மரங்களை சமூக விரோதிகள் மதுபோதையில் சேதப்படுத்தி வருகின்றனர். மேலும் திறந்த வெளி கழிப்பிடமாக பயன்படுத்தப்படுகிறது. பொழுதுபோக்கு பகுதியாக இருந்த இந்த ஏரி, தற்போது யாரும் குடும்பத்துடன் செல்ல முடியாதபடி உள்ளது. தற்போது மூன்று ஆண்டுகளுக்கு பிறகு தொடர்ந்து பெய்த மழையினால், இந்த ஏரி நிரம்பியுள்ளது. இதன் மூலம் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாய பணிகள் நடக்கும்,’ என்றனர்.