காரிமங்கலம், ஜூன் 15: காரிமங்கலம் அருகே ஊருக்குள் செல்லாத தனியார் பஸ்சை பொதுமக்கள் சிறை பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தர்மபுரி- கிருஷ்ணகிரி வழியே மாட்லாம்பட்டி பெரியாம்பட்டி காரிமங்கலம் வழியாக செல்ல அரசு மற்றும் தனியார் பஸ்களுக்கு அரசு சார்பில் பர்மிட் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த பர்மிட்டை பொருட்படுத்தாமல் பெரும்பாலான தனியார் மற்றும் அரசு பஸ்கள் பைபாஸ் சாலையிலேயே சென்று வருகிறது. இந்நிலையில், நேற்று காரிமங்கலம் அடுத்த பெரியாம்பட்டியை சேர்ந்த கல்லூரி மாணவர் உள்பட சிலர், கிருஷ்ணகிரியில் இருந்து ஊருக்கு செல்ல, தர்மபுரி நோக்கி சென்ற தனியார் பஸ்சில் ஏறி உள்ளனர்.
நான்ஸ்டாப் முறையில் பஸ் இயக்கப்படுவதால், பெரியாம்பட்டி ஊருக்குள் செல்லாது என கூறியதுடன், அவர்களிடம் தர்மபுரி வரை செல்லும் கட்டணமும் வசூலித்துள்ளனர். இதனால் பயணிகளுக்கும் பஸ் கண்டக்டருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பஸ்சில் பயணம் செய்தவர்கள், செல்போன் மூலம் ஊர்க்காரர்களிடம் தெரிவித்துள்ளனர். பின்னர், பெரியாம்பட்டிக்கு வந்த போது, பஸ்சை சிறை பிடித்து பொதுமக்கள் மற்றும் பயணிகள் நிறுத்தி, ஊருக்குள் பஸ்கள் செல்லாதது குறித்து சரமாரியாக கேள்வி எழுப்பினர். அப்போது கண்டக்டர், டிரைவர் மற்றும் பொதுமக்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆர்டிஓ, பிரேக் இன்ஸ்பெக்டர் ஆகியோரிடம் அனுமதி பெற்று பஸ்சை பைபாஸ் சாலையில் இயக்குவதாக தனியார் பஸ் கண்டக்டர், டிரைவர் கூறியதுடன், எங்கு வேண்டுமானாலும் புகார் செய்து கொள்ளுங்கள் என மிரட்டி உள்ளனர். இதற்கு பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கவே, வாக்குவாதம் மேலும் அதிகரித்தது. ஒரு கட்டத்தில் கெஞ்சி கூத்தாடி டிரைவர் மற்றும் கண்டக்டர் பஸ்சை அங்கிருந்து எடுத்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை
ஏற்படுத்தியது.


