தர்மபுரி, மே 12: தர்மபுரி கலெக்டர் ஆபீசில் 8 வாரத்திற்கு பின்பு நடைபெற்ற வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 276 மனுக்கள் குவிந்தன.
தமிழக சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு, கடந்த மார்ச் மாதம் 15ம் தேதி வெளியானது. அன்று முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. இதையடுத்து, அரசு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் நிறுத்தப்பட்டன. மேலும், கலெக்டர் ஆபீசில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம், விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டமும் ரத்து செய்யப்பட்டது. பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை கலெக்டர் ஆபீசில் வைக்கப்பட்டிருந்த பெட்டிகள் போட்டுச் சென்றனர். இந்நிலையில், தேர்தல் முடிந்து நடத்தை விதிகள் வாபஸ் பெறப்பட்டதால் கலெக்டர் ஆபீஸ்களில் 8 வாரங்களுக்கு பின்பு நேற்று வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.
தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக அதியன் கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்திற்கு, கலெக்டர் சதீஸ் தலைமை வகித்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். சாலை, குடிநீர் வசதி, பஸ் வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் வேண்டியும், பட்டா வேண்டுதல், சிட்டா பெயர் மாற்றம், புதிய குடும்ப சான்றிதழ், வேலைவாய்ப்பு, முதியோர் ஓய்வூதியத் தொகை, இலவச வீட்டுமனை பட்டா உட்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்தும், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை, உபகரணங்கள் வேண்டியும் மொத்தம் 276 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, தனி மாவட்ட வருவாய் அலுவலர்(சிப்காட்) சந்திரசேகரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரூபன் சங்கர் ராஜ், மகளிர் திட்ட இயக்குநர் சுந்தர்ராஜன் உள்ளிட்ட தொடர்புடைய அரசுத்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
