தர்மபுரி, ஜூன் 11: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம் பஞ்சப்பள்ளி கிராமத்தில், மக்கள் தொடர்புத்திட்ட முகாம் நடந்தது. முகாமிற்கு கலெக்டர் சரவணன் தலைமை வகித்து, 153 பயனாளிகளுக்கு ரூ.84.24 லட்சம் மதிப்பில், பல்வேறு துறைகளின் சார்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகையில், `தமிழக அரசின் மக்கள் தொடர்பு திட்ட முகாம், பின்தங்கிய பகுதிகளை தேர்வு செய்து நடத்தப்படுகிறது. அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்கள் குறித்த விளக்கத்தை இணையதளம் மூலமாகவோ, கிராமப்புற அலுவலகங்களின் மூலமாகவோ, பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் தெரிந்து கொள்ளலாம். இளைஞர்கள் தங்கள் திறனை வளர்க்கவும், விவசாயிகள் தங்களது தொழில் மேம்படவும், பெண்கள் கல்வி பெற்று சிறந்து, சுயதொழில் தொடங்கவும் மானியத்துடன் கூடிய கடனுதவிகள் வழங்கப்படுகிறது. சுய தொழில் தொடங்கி, பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைய பல்வேறு கடனுதவிகள் அரசால் வழங்கப்படுகிறது,’ என்றார்.
முன்னதாக, வருவாய்த்துறை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளின் சார்பில், கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது. முகாமில், பாலக்கோடு எம்எல்ஏ கே.பி.அன்பழகன், மகளிர் திட்ட இயக்குநர் சுந்தர்ராஜன், தர்மபுரி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி, தனித்துணை கலெக்டர் செல்வி, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வேர் பாதுகாப்பு அலுவலர் கோவிந்தன், உதவி ஆணையர் (ஆயம்) கோபு, அலுவலர்கள் பண்டரிநாதன், மனோஜ் முனியன், பழனிசாமி, சரவணன், பவித்ரா, அசோக்குமார், பாலக்கோடு தாசில்தார் அசோக்குமார் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


