தர்மபுரி, ஜூலை 9: தர்மபுரி மாவட்டத்தில் பருவமழை குறைந்ததால் சின்னாறு அணையில் நீர்மட்டம் குறைந்ததோடு, அதன் கால்வாயும் வறண்டு போனது. எனவே, கால்வாயின் கரைகளை தூர்வாரி பலப்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்தில் விவசாயத்துக்கு பயன்படும் வகையில் சின்னாறு அணை, கேசர்குளிஅல்லா, நாகாவதி, தொப்பையாறு, தும்பல அள்ளி, வாணியாறு, வரட்டாறு அணை என மொத்தம் 7 அணைகள் உள்ளன. இந்த அணைகள் மூலம் மொத்தம் 4267.92 மில்லியன் கன அடி நீரை சேமித்து வைத்துக்கொள்ள முடியும். ஆனால், நடப்பாண்டு வழக்கத்தைவிட மழையளவு குறைந்ததால், இந்த அணைகளில் நீர்மட்டம் படு பாதளத்திற்கு சென்று விட்டது. ஆண்டுதோறும் ஜனவரி முதல் டிசம்பர் வரை தர்மபுரி மாவட்டத்தில் சராசரியாக 942 மி.மீ. மழை பொழிவது வழக்கம். நடப்பாண்டில் ஜனவரி முதல் மே வரை சராசரியாக 110 மி.மீ. மழை பெய்துள்ளது.


