Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

தர்மபுரி-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே குண்டலப்பட்டியில் சுரங்கப்பாதை அமைக்க அமைதி பேச்சுவார்த்தைஅதிகாரிகள், கிராம மக்கள் பங்கேற்பு

தர்மபுரி, ஜூலை 8: தர்மபுரி-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே குண்டலப்பட்டி பஸ் ஸ்டாப் அருகே சுரங்கப்பாதை அமைப்பது தொடர்பாக ஒரு மணி நேரம் அமைதி பேச்சுவார்த்தை ஆர்டிஓ தலைமையில் நடந்தது. அதிகாரிகள், கிராம மக்கள் கலந்து கொண்டனர். தர்மபுரி-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையின் அருகே தர்மபுரி குண்டலப்பட்டி கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் 1000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் விவசாயம், விவசாய கூலி மற்றும் கால்நடைகள் வளர்ப்பு தொழில் செய்து வருகின்றனர். இச்சாலையில் தினசரி பல ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள் வந்து செல்கின்றன. குண்டலப்பட்டி கிராம மக்கள் சொந்த வேலை விஷயமாக செல்ல தேசிய நெடுஞ்சாலை கடந்து தான் செல்ல வேண்டியது உள்ளது.

மேலும் தனியார் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் தேசிய நெடுஞ்சாலையை கடந்து, சாலையின் எதிர் திசை சாலையின் வழியாகத்தான் செல்ல வேண்டியது உள்ளது. எனவே குண்டலப்பட்டி பஸ் ஸ்டாப் அருகே தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே சுரங்கப்பாதை அமைத்து தரவேண்டும் என்று மக்கள் நீண்டகாலமாக கோரிக்கை வைத்து வருகின்றனர். தற்போது குண்டலப்படடி கால்நடை ஆராய்ச்சி நிலையம் எதிரே தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படுகிறது. இந்த பணியின் போதே சுரங்கப்பாதை அமைத்து தர வேண்டும் என்று குண்டலப்பட்டி கிராமமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

ஆனால், சுரங்கப்பாதை அமைத்து தருவது குறித்து தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் எந்த முடியும் எடுக்கவில்லை. இதையடுத்து குண்டலப்பட்டி மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் நேற்று தர்மபுரி ஆர்டிஓ அலுவலகத்தில் ஆர்டிஓ கோவிந்தன் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. இதில் தாசில்தார் சுகுமார், டிஎஸ்பி சிவானந்தன், விஏஓ விஜயகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர். மேலும், கிராம மக்கள் சார்பில் சரவணன், பூமணி, துரை, ரவி, தம்பி என்ற ஜெய்சங்கர், ஆறுமுகம், மாதையன், செல்வம், செல்வராஜ் உள்ளிட்டோரும், தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

இந்த பேச்சுவார்த்தையில், கிராம மக்கள் எங்களுக்கு தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே சுரங்கப்பாதை உறுதியாக அமைத்து தர வேண்டும் என்றனர்.

அதற்கு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘கிராம மக்களின் கோரிக்கை டெல்லி தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையத்திற்கு அனுப்பி வைத்துள்ளோம். இன்னும் சுரங்கப்பாதை அமைத்து தர அனுமதி கிடைக்கவில்லை. அனுமதி கிடைத்தவுடன் அமைத்து தர நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர். ஆர்டிஓ கோவிந்தன் கூறுகையில், ‘சாலை விதிமுறைகளின் படி தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சுரங்கப்பாதை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார். இதுகுறித்து கிராமமக்கள் கூறுகையில், ‘தர்மபுரி வட்டம் குண்டலப்பட்டி கிராமத்தின் முன்பு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலையை கடந்த செல்வதால் சாலை விபத்தில் பல பேர் இறந்துள்ளனர். இந்த உயிரிழப்பு நடக்காமல் இருக்கவே சாலையின் குறுக்கே சுரங்கப்பாதை அமைத்து தரவேண்டும் என்று கேட்கிறோம். இல்லையென்றால் ஒன்றுகூடி பேசி அடுத்த கட்ட முடிவை தெரிவிப்போம்’ என்றனர்.