Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

மாவட்ட பள்ளிக்கல்வித்துறை மூலம் 1382 அரசு பள்ளிகளுக்கு இலவச பாடப்புத்தகங்கள் அனுப்பும் பணி தீவிரம்முதன்மை கல்வி அலுவலர் ஆய்வு

தர்மபுரி, மே 7: தர்மபுரி மாவட்டத்தில், கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கும் முதல் நாளிலேயே, சுமார் 1.75 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு இலவச பாடநூல் விநியோகம் செய்யப்படுகிறது. இதற்காக குடோனில் இருந்து 1382 அரசு பள்ளிகளுக்கு புத்தகங்களை அனுப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி, நல்லம்பள்ளி, பென்னாகரம், காரிமங்கலம், பாலக்கோடு, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய 7 தாலுகா பகுதிகளில், 1575 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் உள்ளன. இதில், தர்மபுரி, அரூர் தொடக்க கல்வி மாவட்டத்தில் தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் 1165 உள்ளன. இதில், சுமார் 1 லட்சம் மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். தர்மபுரி தொடக்கக்கல்வி மாவட்டத்தில் 647 தொடக்க, நடுநிலைப்பள்ளிகளும், அரூர் தொடக்கக்கல்வி மாவட்டத்தில் 518 தொடக்க, நடுநிலைப்பள்ளிகளும் உள்ளன. இந்த பள்ளிகள் கோடை விடுமுறை முடிந்து, வரும் ஜூன் 1ம் தேதி திறக்கப்படுகிறது. பள்ளி திறக்கும் நாள் அன்று, மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச பாடநூல்கள் வழங்க வேண்டும் என கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, 1ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை உள்ள மாணவ, மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்பட உள்ளது. நடப்பு கல்வியாண்டிற்கான வழங்கப்பட வேண்டிய இலவச பாடபுத்தகங்கள் அனைத்தும், தமிழ்நாடு பாடநூல் கழகம் மூலம் அச்சிடப்பட்டு, இலக்கியம்பட்டி குடோனுக்கு வந்தது. இந்த குடோனில் இருந்து தர்மபுரி முதன்மை கல்வி அலுவலகம் மற்றும் தொடக்க கல்வி மாவட்டம் வாரியாக அந்தந்த பகுதி பள்ளிகளுக்கு அனுப்பும் பணி தீவிரமாக நடக்கிறது. இதில், 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை தர்மபுரி, அரூர் தொடக்கக் கல்வி மாவட்டம் என 2 உள்ளது. 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, தர்மபுரி ஒரே கல்வி மாவட்டம் தான். தர்மபுரி முதன்மை கல்வி மாவட்டத்தில் அரசு பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளி, நகராட்சி பள்ளி, சுயநிதிபள்ளி, ஆதிதிராவிடர் நல பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படிக்க உள்ள மாணவ, -மாணவிகளுக்கு வழங்கப்படுவதற்காக, அனைத்து பாடத்திட்டங்களுக்கான புதிய புத்தகங்கள் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுவிட்டன.

இந்த புத்தகங்கள் பள்ளிகளில் உள்ள தனித்தனி அறைகளில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. அதே போல், ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தொடக்க பள்ளி மற்றும் நடுநிலை பள்ளிகளில் 1 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான பாட புத்தகங்கள், அந்தந்த ஒன்றிய வட்டார கல்வி அலுவலக கட்டுப்பாட்டில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. பள்ளிகள் திறக்கும் முதல் நாளில் அனைத்து மாணவர்களுக்கும் இலவச பாடபுத்தகம் வழங்கப்படும். இலக்கியம்பட்டி அரசு பள்ளி பாடநூல் குடோனில் இருந்து, அரசு பள்ளிகளுக்கு புத்தகங்களை அனுப்பும் பணியை, முதன்மை கல்வி அலுவலர் ஜோதிசந்திரா ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) பெருமாள், பள்ளிக்கல்வித்துணை ஆய்வாளர் பொன்னுசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், `தர்மபுரி மாவட்டத்தில் மொத்தம் 1382 பள்ளிகள் உள்ளன. இதில் சுமார் 1.75 லட்சம் மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். அனைத்து பள்ளிகளிலும் கடந்த 25ம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டது. விடுமுறை முடிந்து வரும் ஜூன் 1ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இதனை முன்னிட்டு, சென்னை மற்றும் கோவை பதிப்பகத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட இலவச பாடபுத்தகங்களை அரசு பள்ளிகளுக்கு அனுப்பும் பணி தொடங்கியுள்ளது,’ என்றனர்.