தினசரி 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயன்; சூப்பர் ஸ்பெஷாலிட்டியாக தரம் உயரும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை
தர்மபுரி, ஜூலை 6: தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை, சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ள நிலையில், அரசின் அனுமதிக்காக காத்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தர்மபுரி அரசு தலைமை மருத்துவமனை, கடந்த 2008ம் ஆண்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. ரூ.100 கோடியில் 5 மாடி மருத்துவமனை கட்டிடம் கட்டப்பட்டது. இதில், 16 அறுவை சிகிச்சை அரங்குகள், டிஜிட்டல் எக்ஸ்ரே, சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ ஸ்கேன் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, ஆண்கள், பெண்கள் வார்டு, விபத்து அவசர சிகிச்சை பிரிவு, கண், பல், எலும்பு, பிரசவம், பச்சிளங்குழந்தைகள், போதை மறுவாழ்வு மையம், கண் வங்கி, தாய்ப்பால் வங்கி தனியாக இயங்கி வருகிறது. மேலும் தலசிமியா, டயாலிசிஸ், ஆதரவற்ற மனநோயாளிகள் மீட்பு மற்றும் சிகிச்சை மையம், ரத்தத்தில் உள்ள அணு கண்டறியும் ஹீமோபிலியா, கேன்சர், அதி தீவிர சிகிச்சை பிரிவுகள் உள்ளிட்ட 28 துறை சார்ந்த சிகிச்சை பிரிவுகள் இயங்கி வருகின்றன.
தினசரி 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புறநோயாளிகளும், 1200க்கும் மேற்பட்ட உள் நோயாளிகளும் சிகிச்சை பெறுகின்றனர். தற்போது, அரசு மருத்துவமனையில் 1230 படுக்கையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை உள்ளிட்ட 4 மாவட்டங்களைச் சேர்ந்த நோயாளிகள் தினசரி சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இவர்களுக்கு சிகிச்சை அளிக்க 250 டாக்டர்கள், 300க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பணியாற்றி வருகின்றனர். தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு வெளி மாவட்டங்களில் இருந்து நோயாளிகள் அதிகம் வருகின்றனர். குறிப்பாக பிரசவத்திற்கு அதிக கர்ப்பிணி தாய்மார்கள் வருகின்றனர். மகப்பேறு வார்டில் தினசரி 25 முதல் 30 பிரசவம் நடக்கிறது. தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிநவீன வசதிகளும், சிகிச்சை நிபுணர்கள் வசதியும், நோயாளிகள் வரத்து அதிகரிப்பால் ரூ.250 கோடி மதிப்பீட்டில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி சிகிச்சை பிரிவு அமைக்க அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், `தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு நோயாளிகள் வருகை அதிகரித்து வருகிறது. இதையடுத்து, அனைத்து வசதிகளுடன் கூடிய சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும்,’ என்றனர். இதுதொடர்பாக அதிகாரிகளிடம் கேட்ட போது, தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரியில் 500 மாணவ, மாணவிகள் எம்பிபிஎஸ் மருத்துவ படிப்பை படிக்கின்றனர். 135 பேர் மருத்துவ மேற்படிப்பை படித்து வருகின்றனர். 100 பேர் பயிற்சி டாக்டர்களாக செயல்படுகின்றனர். இந்த மருத்துவமனை பல்வேறு நவீன மருத்துவ வசதிகளுடன் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக தரம் உயர்த்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.250 கோடி மதிப்பில் நவீன மருத்துவ வசதிகளுடன் சூப்பர் ஸ்பெஷாலிட்டி சிகிச்சை பிரிவை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. இந்த சூப்பர் ஸ்பெஷாலிட்டி சிகிச்சை பிரிவை 6 தளங்களுடன் அமைக்கவும், அவற்றில் தரைதளம் மற்றும் முதல்தளத்தில் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு அமைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அரசின் அனுமதி கிடைத்தவுடன், இதற்கான பணிகள் தொடங்கும் என்றனர்.
