தர்மபுரி உழவர் சந்தையில் ரசாயனம் மூலம் பழுக்க வைத்த மா, வாழை பழங்கள் விற்பனை: நடவடிக்கை எடுக்க கோரிக்கை
தர்மபுரி, மே 6: தர்மபுரி உழவர் சந்தையில், ரசாயன பொருள் மூலம் பழுக்க வைத்த மா, வாழை உள்ளிட்ட பழங்களை கொண்டு வந்து விற்பனை செய்வதாக நுகர்வோர்கள் புகார் தெரிவித்துள்ளனர். தர்மபுரி நகரில் ஏராளமான தள்ளுவண்டி கடைகள், சாலையோர சிறு கடைகளில் மா, வாழை உள்ளிட்ட பழ வகைகள் விற்பனை செய்யப்படுகிறது. இக்கடைகளில் விற்கப்படும் பழங்களில் மா, வாழை இரண்டும் பெரும்பாலும் ரசாயன பொருள் மூலம் கனிய வைக்கப்படுவது தெரியவந்துள்ளது. குறிப்பாக தர்மபுரி உழவர் சந்தையில் ரசாயன பொருள் மூலம் மாம்பழம், வாழைப்பழம் கனிய வைத்து விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.
இதுபற்றி பொதுமக்கள் கூறுகையில், மா சீசன் நேரத்தில் சுமார் 3 மாதங்கள் மட்டுமே மாம்பழங்கள் கிடைக்கும். இதை கனிய வைக்க சிலர் வெல்டிங் பணிகளின் போது பயன்படுத்தப்படும் கார்பைடு எனப்படும், ரசாயன பொருளை சிறு சிறு பொட்டலமாகக் கட்டி மாம்பழ குடோனில் வைக்கின்றனர். இந்த ரசாயனபொருள் உதவியால், சில மணி நேரங்களில் மாங்காய் கனியத் தொடங்கி விடுகிறது. ஆனால், இந்த முறையில் கனிய விடப்படும் மாம்பழங்களை தொடர்ந்து உண்பவர்களுக்கு வயிற்றுப்போக்கு முதல் புற்றுநோய் வரை நோய்களும் ஏற்படும். இதை தடுக்கும் வகையில், மாம்பழ குடோன்களில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு மேற்கொள்கின்றனர்.
ரசாயனபொருள் துணையுடன், கனிய வைக்கப்பட்ட பழங்கள் என தெரியவந்தால் அவற்றை பறிமுதல் செய்து அழித்தும் விடுகின்றனர். இருப்பினும் ஆய்வுக்கு பிறகு ஓரிரு நாட்கள் மட்டும் வேதிப்பொருட்களை தவிர்க்கும் வியாபாரிகளில் சிலர் மீண்டும் அதே செயலில் ஈடுபடுகின்றனர். இதுதவிர, ஆண்டுமுழுக்க தர்மபுரி நகரில் வாழைப்பழம் விற்பனை நடக்கிறது. இதில் பெரும்பாலான கடைகளுக்கு விற்பனைக்கு வரும் வாழைப்பழங்கள் ராசாயனபொருள் உதவியுடன் தான் கனிய வைக்கப்படுகிறது. வாழைப்பழத்தை செயற்கை முறையில் கனிய வைக்கும் ரசாயன வேதிப்பொருளைத் தான் பயன்படுத்துகின்றனர். சாமந்தி உள்ளிட்ட சில மலர் சாகுபடிகளின்போது நோய் தாக்கம், சீதோஷ்ணம் உள்ளிட்ட காரணங்களால் சிலரது வயல்களில் மலர்கள் சரிவர மலராது.
மலர்கள் ஒவ்வொன்றும் முழுமையாக மலராமல் இறுகியபடி பாதி மலர்ந்தும், பாதி உள்ளே மடங்கியபடியும் காணப்படும். இதுபோன்ற வயல்களுக்கு அடிக்கும் மருந்தை விற்பனையாளர்கள் பரிந்துரைக்கும் அளவுபடி பூச்செடி வயல்களுக்கு தெளிப்பர். இதை தெளித்த அடுத்த சில நாட்களுக்கு பிறகு மலரக்கூடிய மலர்கள் மிக செழிப்பாக மலரும். விற்பனையின்போது கூடுதல் விலையையும் பெற்றுத் தரும். இந்த மருந்தின் உதவி கொண்டு தான் தர்மபுரி நகர பகுதிகளில் வாழைக் காய்கள் கனிய விடப்படுகிறது. தர்மபுரி நகரில் விற்பனையாகும் 70 சதவீதம் வாழைப்பழங்கள் இந்த ரசாயனபொருளின் மூலம் தான் பழுக்க வைக்கப்படுகிறது. எனவே உணவு பாதுகாப்பு அதிகாரிகள், வேதிப்பொருள் துணையுடன் காய்களை கனிய விடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மருந்து விற்பனையாளர்கள் விவசாயிகளுக்கு மட்டுமே இதுபோன்ற மருந்துகளை விற்பனை செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடுகளையும் உருவாக்க வேண்டும். எச்சரிக்கை செய்து சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றனர்.
