Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

கவுண்டிங் சென்டரிலிருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

தர்மபுரி, மே 6: தர்மபுரி வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கைக்குப் பின்னர் பாதுகாப்பாக, மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பாதுகாப்பு அறைக்கு கொண்டு வரப்பட்டன.

தமிழக சட்டமன்ற தேர்தல், கடந்த 23ம் தேதி ஒரே கட்டமாக நடந்தது. தர்மபுரி மாவட்டத்தில் 5 சட்ட மன்ற தொகுதிகளிலும் மொத்தம் 957 வாக்குப்பதிவு மையங்களில் 1,596 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு தேர்தல் நடந்து முடிந்தன. தேர்தலின் போது 1596 வாக்குச்சாவடிகளுக்கும் தேவையான மின்னணு வாக்குப்பதிவு (இவிஎம்) இயந்திரங்களுடன் கூடுதலாக 20 சதவீத மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் கொண்டு செல்லப்பட்டன.

ஏதேனும், தொழில் நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டால் அவற்றுக்கு மாற்றாக பயன்படுத்த இந்த 20 சதவீத கூடுதல் வாக்குப் பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்வது வழக்கம். வாக்குப்பதிவுக்குப் பின்னர் 11 நாட்கள் கழித்து கடந்த 4 ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடந்தது. அதுவரை தர்மபுரி செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த வாக்கு எண்ணும் மையத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்தன. நேற்று முன்தினம் வாக்கு எண்ணிக்கை நடந்து முடிந்து, முடிவுகள் அறிவித்த பின்னர், மின்னணு வாக்குப்பதிவு (இவிஎம்) இயந்திரங்கள் பெட்டிகளில் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டு, தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாத்து வைக்கப்படும் அறைக்கு போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் கொண்டு வந்து, பாதுகாப்பாக வைத்து அறைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டன. இந்த பணிகள், நேற்று முன்தினம் இரவு தொடங்கி, நேற்று மாலை வரை தொடர்ந்து நடந்தது. துப்பாக்கி ஏந்திய போலீசார் இவற்றுக்கு பாதுகாப்பு அளித்தனர்.