தர்மபுரி, மே 6: தர்மபுரி மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட்ட 83 பேரில், 68 பேர் டெபாசிட் இழந்தனர். தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டசபை தொகுதியில் அதிமுக சார்பில் கேபி அன்பழகன், திமுக சார்பில் செந்தில்குமார், தவெக சார்பில் கோபி, நாம் தமிழர் கட்சி சார்பில் பூபதி, தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் ஜெயராமன் உள்பட மொத்தம் 14 பேர் போட்டியிட்டனர். பாலக்கோடு தொகுதியில் மொத்தம் உள்ள 2,40,322 வாக்காளர்களில் 2,22,470 பேர் வாக்களித்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம், செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரியில் நடந்த வாக்கு எண்ணிக்கையில் முதல் சுற்று முதலே கேபி அன்பழகன் அதிகவாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்தார். 23 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கையின் முடிவில் 1,02,807 வாக்குகள் பெற்று 39,042 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் தொடர்ந்து 6வது முறையாக கேபி அன்பழகன் வெற்றியை தக்கவைத்தார். தவெக வேட்பாளர் தவெக கோபி 63,765 வாக்குகள் பெற்று 2ம் இடத்தை பிடித்தார். திமுக வேட்பாளர் செந்தில்குமார் 50,043 வாக்குகள் பெற்று 3வது இடத்தை பிடித்தார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பூபதி 5,598 வாக்குகள் பெற்றார். இந்த தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உள்பட 11 பேர் டெபாசிட் இழந்தனர்.
பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் மரகதம் வெற்றிவேல், திமுக சார்பில் பழனியப்பன், தவெக சார்பில் திலகவதி, நாம் தமிழர் கட்சி அர்ச்சனா உள்பட 14 பேர் போட்டியிட்டனர். இந்த தொகுதியில் மொத்தம் உள்ள 2,56,640 வாக்காளர்களில் 2,31,851பேர் வாக்களித்தனர். நேற்றுமுன்தினம் நடந்த வாக்கு எண்ணிக்கை முடிவில் அதிமுக வேட்பா ளர் மரகதம் வெற்றிவேல் 1,01,829 வாக்குகள் பெற்று 33,114 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் பழனியப்பன் 68,715 வாக்குகள் பெற்றார். த.வெ.க. வேட்பாளர் திலகவதி 57,619 வாக்குகள் பெற்றார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அர்ச்சனா 5,216 வாக்குகள் பெற்றார். இந்த தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உள்பட 11 பேர் டெபாசிட் இழந்தனர்.
அரூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் சம்பத்குமார், திமுக சார்பில் சண்முகம், தவெக சார்பில் ராகேஷ், நாம் தமிழர் கட்சி சார்பில் அனிதா, தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் மணிலா ஆகியோர் உள்பட மொத்தம் 14 பேர் போட்டியிட்டனர். இந்த தொகுதியில் 2,45,692 வாக்காளர்களில் 2,15,306 பேர் இந்த தேர்தலில் வாக்களித்தனர். வாக்கு எண்ணிக்கையின் முடிவில் அதிமுக வேட்பாளர் சம்பத்குமார் 75,523 வாக்குகள் பெற்று 3,329 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் சண்முகம் 72,194 வாக்குகள் பெற்று 2ம் இடம் பெற்றார். தவெக வேட்பாளர் ராகேஷ் 62,756 வாக்குகள் பெற்று 3ம் இடமும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அனிதா 4,500 வாக்குகள் பெற்று 4ம் இடமும் பிடித்தார். இந்த தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உள்பட 11 பேர் டெபாசிட் இழந்தனர்.
தர்மபுரி சட்டமன்ற தொகுதியில் பாமக சார்பில் சவுமியா அன்புமணி போட்டியிட்டார். இவரை எதிர்த்து தேமுதிக வேட்பாளர் இளங்கோவன், தவெக வேட்பாளர் சிவன், நாதக வேட்பாளர் சாந்தலட்சுமி, ராமதாஸ் அணி சார்பில் சரவணன் உட்பட 19 பேர் போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கையில் பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணி 93,693 ஓட்டுக்கள் பெற்று, 20,896 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தவெக வேட்பாளர் சிவன் 74,147 வாக்குகள் பெற்றார். தேமுதிக வேட்பாளர் இளங்கோவன் 56,905 வாக்குகள் பெற்றார், நாம்தமிழர் கட்சி வேட்பாளர் உள்பட 16 பேர் டெபாசிட் இழந்தனர்.
பென்னாகரம் சட்டமன்ற தொகுதியில் தவெக வேட்பாளர் கஜேந்திரன் 81,240 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பாமக வேட்பாளர் பாடி செல்வம் 76,737 வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளர் ஜி.கே.எம்.தமிழ்குமரன் 53,901 வாக்குகளும் பெற்றனர். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உள்பட 19 பேர் டெபாசிட் இழந்தனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டமன்ற தொகுதிகளிலும் 83 பேர் போட்டியிட்டனர். இதில் 68 பேர் டெபாசிட் இழந்தனர். தர்மபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் தொகுதிகளை மீண்டும் அதிமுக தக்க வைத்து கொண்டது
குறிப்பிடத்தக்கது.
