தர்மபுரி, நவ.5: சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து, முதல்வர் விஜய் நேற்று காணொலி மூலமாக, தர்மபுரி சோகத்தூரில், ரூ.19.20 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த அரசு பட்டுக்கூடு அங்காடி வளாகத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் சரவணன் கலந்துகொண்டு, குத்துவிளக்கு ஏற்றி வைத்து பார்வையிட்டார்.
நிகழ்ச்சியில் கலெக்டர் கூறியதாவது:
தர்மபுரி சோகத்தூரில், சுமார் 80 ஆயிரம் சதுர அடி பரப்பளவில், நவீன வசதிகளுடன் ஒருங்கிணைந்த அரசு பட்டுக்கூடு அங்காடி வளாகம் கட்டப்பட்டுள்ளது. தர்மபுரி அரசு பட்டுக்கூடு அங்காடியில், ஆண்டுக்கு சராசரியாக சுமார் 600 மெட்ரிக் டன் பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சுமார் 15 முதல் 20 மாவட்டங்களில் உள்ள பட்டு விவசாயிகள் பட்டுக்கூடுகள் கொண்டு வருகின்றனர். இவ்வளாகத்தில் பட்டுக்கூடு விற்பனைக்கான பிரத்யேகக் கட்டிடம், ஆண் மற்றும் பெண் விவசாயிகள் மற்றும் பட்டு நூற்பாளர்களுக்கான தனித்தனி காத்திருப்பு கூடம், உணவகம், வாகன நிறுத்துமிடம், அணுகுசாலை, மின்சார வசதி, குடிநீர் வசதிகள், பட்டு வளர்ப்புக்குத் தேவையான இடுபொருட்கள் விற்பனை மையம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
ஒருங்கிணைந்த அரசு பட்டுக்கூடு அங்காடி வளாகத்தின் மூலம், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் உள்ள பட்டு விவசாயிகள், பட்டு நூற்பாளர்கள் மற்றும் பட்டு முறுக்கேற்றுபவர் பயன் பெறுவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், சேலம் பட்டு வளர்ச்சித்துறை துணை இயக்குநர் அப்துல் பரூக், தர்மபுரி பட்டு வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் கஸ்தூரி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் லோகநாதன், செயற்பொறியாளர் பன்னீர் செல்வம், உதவி செயற்பொறியாளர் ராஜ்குமார், தர்மபுரி தாசில்தார் சுகுமார், பட்டுவளர்ச்சித்துறை மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


